Breaking News

ஜென்டில்மேன் 2: `பாகுபலி' இசையமைப்பாளருடன் கூட்டணி... மீண்டும் படத் தயாரிப்பில் கே.டி.குஞ்சுமோன்!

தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக கே.டி.குஞ்சுமோனுக்கு தனி இடம் உண்டு. ஆரம்ப காலங்களில் திரைப்பட விநியோகஸ்தராக காலடி எடுத்து வைத்தவர், அதன் பிறகு மலையாளத்தில் வெற்றிப் படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்தார். இயக்குநர்கள் ஷங்கர், 'காதல் தேசம்' கதிர் என பலரையும் இயக்குநராக்கியவர் இவர். பவித்ரனின் 'வசந்தகால பறவை' மூலம் தமிழுக்கு வந்தார். தொண்ணூறு காலகட்டங்களில் 'ஜென்டில்மேன்', 'காதலன்', 'சூரியன்', 'காதல் தேசம்', 'ரட்சகன்', 'நிலாவே வா' என பிரமாண்ட படங்களைத் தயாரித்தவர். அடுத்தும் விஜய்யை வைத்து 'என்றென்றும் காதல்' கொடுத்தார். அதன்பிறகு தயாரிப்பில் இருந்து ஒதுங்கியவர் தனது மகன் அபியை கதாநாயகனாக்கி 'காதலுக்கு மரணமில்லை' என்ற படத்தை ஆரம்பித்தார். டீஸர் வரை வளர்ந்தது. குஞ்சுமோனின் மகன் எபியை ஹீரோவாக்கி 'கோடீஸ்வரன்' என்ற படத்தையும் தயாரித்தார். ஆனால், முந்தைய படங்களின் நஷ்டத்தினால் தனது மகனின் படத்தை வெளியிட முடியாமல் திணறியவர், தயாரிப்பில் இருந்தே சில காலம் ஒதுங்கினார்.

ஜென்டில்மேன்

இந்நிலையில் மீண்டும் தற்போது படத் தயாரிப்பில் இறங்குகிறார் கே.டி.குஞ்சுமோன். தனக்கொரு அடையாளத்தை கொடுத்த 'ஜென்டில்மேன்' படத்தின் நினைவாக இப்போது தயாரிக்க உள்ள படத்திற்கு 'ஜென்டில்மேன் 2' என டைட்டில் வைத்திருக்கிறார். இதை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக ரசிகர்களுக்கு இந்தப் படம் தொடர்பாக ஒரு போட்டியை அறிவித்திருந்தார்.

அதன்படி 'ஜென்டில்மேன் 2' படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை சரியாகக் கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக அளிக்க போவதாக அறிவித்தார். தற்போது அந்த இசையமைப்பாளர் கீரவாணி (மரகதமணி) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், 'பாகுபலி' உள்ளிட்ட தெலுங்கிலும், தமிழிலும் பல ஹிட் பாடல்கள் கொடுத்தவர்தான் 'ஜென்டில்மேன் 2'வின் இசையமைப்பாளர். இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

கே.டி.குஞ்சுமோன், கீரவாணி

மேலும் படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து கே.டி.குஞ்சுமோன் வட்டாரத்தில் விசாரித்தால், "இது முழுக்க முழுக்க புதுப்படம்தான். இசையமைப்பாளர் மட்டுமே முடிவாகி உள்ளார். நடிகர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும் இன்னும் முடிவாகவில்லை. அவர்கள் ஒவ்வொருவர் கமிட்டாகும் போது, இது போன்ற ஆச்சரிய போட்டிகள் வைத்து அறிவிக்க திட்டமிட்டிருக்கிறார்" என்கிறார்கள்.



from Latest News

No comments