Breaking News

மைனஸ் 35 டிகிரி செல்சியஸ்... அமெரிக்க - கனடா எல்லையில் உறைந்த நிலையில் 4 இந்தியர்களின் உடல்கள்!

அமெரிக்கா-கனடா எல்லையில், ஒரு கைகுழந்தை உட்பட நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிலையில் உறைந்த நிலையில் கண்டறியப்பட்ட உடல்கள் இந்தியர்களுடையது என்றும், அதுவும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுடையது எனத் தெரியவந்துள்ளது. மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் குளிர் மற்றும் கடும் காற்றினிடையே இவர்கள் எல்லையைக் கடக்க முயன்றுள்ளனர் என்றும் அம்முயற்சியில் உயிரிழந்தனர் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

கனடாவின் மத்திய மானிடோபா மாகாணத்தில் உள்ள எமர்சன் நகரத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் அமெரிக்க எல்லையில் இரண்டு பெரியவர்கள், ஒரு குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து எல்லையின் இருபுறமும் தேடியதில் நான்காவதாக ஒரு சிறுவனின் உடல் கண்டறியப்பட்டது. கனடாவின் போலீஸ் அறிக்கையில், ``கடும் குளிர் காரணமாக அவர்கள் அனைவரும் இறந்ததாகத் தெரிகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க - கனடா

அமெரிக்க அதிகாரிகள் இந்த துயர சம்பவத்தில் தொடர்புள்ளதாக ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஷாண்ட் என்பவனைக் கைது செய்துள்ளனர். 47 வயதாகும் ஷாண்ட் மனிதக் கடத்தலில் ஈடுப்பட்டு வந்துள்ளான்.

உரிய ஆவணங்கள் இன்றி பயணித்த 2 இந்தியர்களைத் தன் வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளான். அவரின் வாகனத்தின் உள்ளே, வேனில் பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாட்டில், மற்றும் சிற்றுண்டிகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஷாண்ட் மற்றும் அவனுடன் பயணித்த இந்தியர்களை எல்லைக் காவல் படையிடம் அழைத்துச் செல்லும் வழியில் ​​​​அதிகாரிகள் ஐந்து இந்திய நாட்டவர்கள் நடந்து செல்வதை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

தாங்கள் எல்லையைத் தாண்டிச் சென்றதாகவும், சிலர் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்த்ததாகவும் சொன்னார்கள். அவர்கள் 11 மணி நேரத்திற்கும் மேலாக நடந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். அந்தக் குழுவில் ஒரு நபர் முதுகுப்பை ஒன்றை வைத்திருந்தார். அவர் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்காக அதனை எடுத்துச் செல்வதாக அதிகாரிகளிடம் கூறினார். அந்தப் பையில் ஆடைகள், டயப்பர் மற்றும் பொம்மைகள் இருந்தன.

இது குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மனிடோபாவின் எமர்சன் அருகே, கனடா-அமெரிக்க எல்லையை கடக்க முயன்ற 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தது எங்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளது.

அமெரிக்க - கனடா

அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு நாங்கள் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் அவர்களுடன் உள்ளன.” எனக் கூறப்பட்டுள்ளது.



from Latest News

No comments