Breaking News

மும்பை: திருமண தகவல் இணையத்தளம் மூலம் டேட்டா! - 35 பெண்களிடம் பழகி மோசடி செய்த வாலிபர் கைது!

திருமண தகவல்களை கொடுக்கும் இணையத்தளங்கள் அதிகரித்த பிறகு அதில் கிடைக்கும் தகவல்களை எடுத்து மோசடி செய்யும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. மும்பை காஞ்சூர் மார்க் பகுதியை சேர்ந்த 28 வயது பெண் வரன் தேடி மராத்தி மெட்ரிமோனியல் தளத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். அதில் கிடைத்த தகவல்களை எடுத்து விஷால் சவ்ஹான் என்பவர் 28 வயது பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.

திருமணம்

இருவரும் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசினர். இதில் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக விஷால் உறுதியளித்தார். அவரின் நம்பிக்கையை பெற்ற பிறகு அவசரமாக தனக்கு பணம் தேவைப்படுவதாக கூறி அப்பெண்ணிடம் ரூ.2.5 லட்சம் பெற்றார். அப்பெண்ணும் விஷாலும் நேருக்கு நேர் கூட சந்தித்துக்கொண்டதில்லை. இருவரும் போனில் மட்டுமே அடிக்கடி பேசியிருக்கின்றனர். அந்த நட்பை வைத்து அப்பெண் விஷாலுக்கு ரூ.2.5 லட்சத்தை அவர் சொன்ன வங்கி கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார். பணம் கையிக்கு வந்ததும் அப்பெண்ணுடனான தொடர்பை அடியோடு துண்டித்துவிட்டார்.

இது தொடர்பாக அப்பெண் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது அப்பெண் டிரான்ஸ்பர் செய்த வங்கி கணக்கு போலியானது என்று தெரிய வந்தது. அதோடு மோசடி செய்த வாலிபரையும் அப்பெண்ணால் சரியாக அடையாளம் காண முடியவில்லை. மும்பை சயான் போலீஸ் நிலையத்திலும் அது போன்ற ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதில் புகார் செய்த பெண்ணிடம் பழகிய நபர் அவரிடம் நம்பிக்கையை பெற்ற பிறகு பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரூ.17 லட்சத்தை அப்பெண்ணிடமிருந்து வாங்கினார். பணத்தை அப்பெண் திரும்ப கேட்ட போது கொடுக்க மறுத்தார். இது குறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விஷால்

காஞ்சூர் மார்க் பெண்ணிடம் மோசடி செய்தவரும், சயானில் மோசடி செய்தவரும் ஒருவர் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து தீவிர விசாரணை நடத்தியல் விஷால் தானேயில் இருப்பது தெரிய வந்தது. அவரின் வீட்டிற்கு சென்ற போது எந்நேரமும் வீடு பூட்டியே இருந்தது. இதையடுத்து போலீஸார் டெலிவரி பாய் வேஷத்தில் விஷால் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்த போது திருமண தகவல் இணையத்தளங்களில் பெயரை பதிவு செய்து கொண்டு வரனுக்காக காத்திருக்கும் பெண்களின் போன் நம்பரை எடுத்து பேசி அவர்களிடம் நட்பை ஏற்படுத்திக்கொண்டு அவர்களிடம் திருமணம் செய்து கொள்வதாகவோ அல்லது பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகவோ கூறி பெண்களிடம் பணத்தை வாங்கி மோசடி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவரின் போனில் சோதனை செய்து பார்த்த போது 35 முதல் 40 பெண்களின் விபரம் இருந்தது. அவர்களுக்கு போலீஸார் போன் செய்து விசாரித்த போது தாங்கள் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்தனர். விஷால் பி.டெக் முடித்து எம்.பி.ஏ.வும் படித்திருந்தார். அவரிடம் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை முழுவதும் பெண்கள் அவரிடம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி சங்கரம்சிங் தெரிவித்தார்.



from Latest News

No comments