``விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்படும்!" - முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ்
``சமுதாய ரீதியாக அல்லாமல், பொதுவான அரசியல் கட்சி தொடங்கப்படும்" என முன்னாள் தலைமைச்செயலாளர் ராம மோகனராவ் பேசியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன்.எம்.பி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
பல்வேறு கட்சியினரும் கலந்துகொண்ட இவ்விழாவில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், ``தெலுங்கு இனத்தை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள், எம்.பி.க்கள் தமிழகத்தில் இருந்தும் திருமலை நாயக்கர் சிலைக்கு மரியாதை செலுத்த யாரும் வரவில்லை.
Also Read: `சுயசரிதைத் திட்டம்... உண்மைகள் வெளிவரும்!’ - முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ்
இதுவரை சமுதாயம், பண்பாடு, கலாசாரத்தை ஒருங்கிணைத்து செயல்பட்டு வந்தேன், விரைவில் முழு நேர அரசியல் ஈடுபட உள்ளேன். அப்படி ஆரம்பிக்கும் கட்சி சமுதாய ரீதியாக அல்லாமல் பொதுவானதாக தொடங்கப்படும்" என்றார்.
2016-ல் தலைமைச்செயலாளராக ராம மோகன ராவ் இருந்தபோது பெரும் சர்ச்சைகளை சந்தித்தார். அது மட்டுமில்லாமல் சில வழக்குகளில் தொடர்புள்ளதாக கூறி அவர் வீட்டில், அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றவர், இரண்டு வருடங்களுக்கு முன் மதுரையில் நடந்த திருமலை நாயக்கர் விழாவில் கலந்துகொண்டு, அரசியல் கட்சி தொடங்கப்போவதாக பேசினார். அதற்கு பின் சமுதாயம் சார்ந்த விழாக்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட தனி அணி அமைக்கப்போவதாக தெரிவித்தார்.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அமைதியானவர், தற்போது மீண்டும் அரசியல் கட்சித் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
from Latest News
No comments