Breaking News

நெல்லை: திமுக பிரமுகர் வெட்டிக் கொலை! - உள்ளாட்சித் தேர்தல் சீட் தகராறு காரணமா?

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியைச் சேர்ந்தவர், அபே மணி என்று பொன்னுதாஸ் ( வயது 38 ). தி.மு.க-வில் 38-வது வார்டு செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். ஆட்டோ மெக்கானிக்காக இருந்த அவர் கடந்த சில வருடங்களாகத் தொழிலை விட்டு விலகி முழுநேர அரசியல்வாதியாக வலம் வந்த அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் மற்றும் மாவட்டச் செயலாளருடன் பொன்னுதாஸ்

நெல்லை மாநகர தி.மு.க-வில் இரு அணிகள் செயல்பட்டுவரும் நிலையில், பொன்னுதாஸ், மாவட்டச் செயலாளர் அணியில் தீவிரமாக இருந்தார். மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காகக் கடந்த சில வருடங்களாக கடன் வாங்கி கட்சிக்காக போஸ்டர் அடிப்பது நிகழ்ச்சிகள் நடத்துவது என செலவு செய்து வந்ததாகக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

மாநகராட்சி தேர்தலில் 38-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தன் தாயார் பேச்சியம்மாளை அந்த வார்டில் நிறுத்த முடிவு செய்திருந்தார். அதற்காக விருப்பமனு கொடுத்திருந்த நிலையில், இன்று தி.மு.க-வில் நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவந்தார்.

Also Read: பழிக்குப் பழி; கட்டட ஒப்பந்ததாரர் கொலை! - ட்ரோன் மூலம் கொலையாளிகளைத் தேடும் நெல்லை போலீஸ்!

பொன்னுதாஸ் நேற்று இரவில் வீட்டுக்குச் சென்றார். அப்போது அவரது வாகனத்தின் பின்னால் வந்த காரில் இருந்த கும்பல் அவரை வெட்டிச் சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பியது. வீட்டின் அருகே இந்தச் சம்பவம் நடந்ததால் பொன்னுதாஸின் சத்தம் கேட்டு அவரின் தாயார் பேச்சியம்மாள் வெளியே வந்துள்ளார். தன் மகனை சிலர் வெட்டுவதைக் கண்டு அவர் கூச்சலிட்டுக் கதறியுள்ளார்.

பலத்த வெட்டுக் காயம் அடைந்த பொன்னுதாஸ் அதே இடத்தில் உயிரிழந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிவந்துள்ளனர். சம்பவம் பற்றிக் கேள்விப்பட்ட போலீஸார் அங்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பொன்னுதாஸுக்கு முருகம்மாள் என்ற மனைவியும் சுபேசன், சரண்யா என்ற குழந்தைகளும் உள்ளனர்

கொலை நடந்த இடம்

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டாஸ்மாக் பார் நடத்துவது தொடர்பான பிரச்னையாக இருக்கும் என்கிற சந்தேகத்தில், அந்தத் தொழிலில் ஈடுபடும் ஒரு பிரமுகர் மற்றும் சில கடை உரிமையாளர்களைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அத்துடன், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலமாகவும் விசாரணை நடக்கிறது.

இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “தி.மு.க வட்டச் செயலாளராக இருந்த பொன்னுதாஸ், மாநகராட்சி தேர்தலில் ஜெயித்து மண்டலத் தலைவராக வேண்டும் என்ற கனவில் இருந்துள்ளார். அவரின் வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தன் தாயாரைத் தேர்தலில் நிறுத்த முடிவெடுத்து அதற்காக வேலை செய்துள்ளார். கட்சியில் அவருக்கு எந்த எதிரிகளும் இருப்பதாகத் தெரியவில்லை.

வட்டச் செயலாளர் என்ற முறையில் அந்தப் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருள்களை வெளியாருக்கு விற்பனை செய்வதைத் தடுத்திருக்கிறார். குறிப்பாக ரேஷன் அரிசியை வெளியில் விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு, டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஏற்கெனவே நடத்தியவர்களிடம் இருந்து வாங்கி தன் ஆதரவாளர்கள் மூலம் நடத்த எற்பாடு செய்திருக்கிறார். இது தொடர்பாகச் சிலருடன் வாக்குவாதம் நடந்திருக்கிறது. அதனால் அவரின் கொலையின் பின்னணியில் இருக்கும் காரணத்தை விசாரித்து வருகிறோம்” என்கிறார்கள்.

பாளையங்கோட்டை பகுதியில் வரும் 1-ம் தேதி பொன்னுதாஸ், டாஸ்மாக் கடையைத் திறக்க இருந்த நிலையில் இந்த கொலை நடந்திருப்பதால் தொழில் ரீதியாக ஏற்பட்ட பகையா என்ற அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

கொலை நடந்த இடம்

இந்த நிலையில் பாளையங்கோட்டை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், கொலை செய்யப்பட்ட பொன்னுதாஸ் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கொலை சம்வத்துக்கு் நியாயம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மூலம் எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.



from Latest News

No comments