Breaking News

கர்ப்பிணியான வனத்துறை அதிகாரியை அடித்து உதைத்த தம்பதி! - மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள பால்சவாடே என்ற இடத்தில் வனத்துறை அதிகாரியாக இருப்பவர் சுலோசனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள கிராமவாசிகள் சிலரை, காட்டில் வேலை செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் அழைத்து சென்றிருக்கிறார். இதற்கு உள்ளூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமச்சந்திரா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு தன்னிடம் கேட்காமல் ஏன் வேலைக்கு ஆட்களை அழைத்து சென்றாய் என்று கேட்டு அப்பெண்ணை ராமச்சந்திராவும் அவரின் மனைவி பிரதிபாவும் சேர்ந்து அடித்து உதைத்து கீழே தள்ளி முடியை பிடித்து இழுத்தனர்.

அருகில் நின்ற அப்பெண் அதிகாரியின் கணவர் இதனை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். இது வைரலாக பரவியது. வீடியோவில் ராமச்சந்திரா அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அந்நேரம் அவரின் மனைவி பிரதிபா வந்து பெண் அதிகாரியை அடித்தார். அதோடு அந்த அதிகாரியின் கணவரை செருப்பால் அடித்தார்.

கையை பிடித்து இழுக்கும் ராமச்சந்திரா

அதோடு ராமச்சந்திராவும், அவரின் மனைவியும் சேர்ந்து கொண்டு, பெண் அதிகாரியின் முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி சண்டையிட்டது போன்று வீடியோ இருந்தது.

இதையடுத்து ராமச்சந்திரா, அவரின் மனைவி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். வீடியோவை பார்த்த மாநில வனத்துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதோடு மாவட்ட எஸ்.பி.க்கும் இது தொடர்பாக உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட எஸ்பி அஜய்குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.

தாக்கப்பட்ட வனத்துறை அதிகாரி மூன்று மாத கர்ப்பிணி. அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். அதில் எதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் குற்றவாளிகள் மீதான சட்டப்பிரிவு மாற்றப்படுப்படும். ராமச்சந்திரா உள்ளூர் வனத்துறை பராமரிப்பு கமிட்டி உறுப்பினராக இருக்கிறார். தாக்குதலுக்கு உள்ளான பெண் வனத்துறை அதிகாரி இது குறித்து கூறுகையில், `எனது கணவரும் வனத்துறை ஊழியராக இருக்கிறார். அவரையும் அடித்து உதைத்தனர்’ என்று தெரிவித்தார்.



from Latest News

No comments