Breaking News

அரசு நிலம் தனியாருக்கு பட்டா போட்ட வழக்கு... அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் கைது!

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்களுக்கு சட்டவிரோதமாக பட்டா மாறுதல் செய்திருப்பதாக புகார் எழுந்தது. இந்த நில மோசடி தொடர்பாக பெரியகுளம் சப்- கலெக்டர் ரிசப் நடத்திய விசாரணையில், கடந்த 2016 - 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம் மற்றும் கெங்குவார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள ஏறக்குறைய 180 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் பெயருக்கு பட்டா மாறுதல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.‌

பட்டா மாறுதலில் கணினி மூலமாக அ-பதிவேட்டில் திருத்தம் செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும் பட்டா மாறுதல் செய்யப்பட்ட சில இடங்களில் பல கோடி மதிப்பிலான கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு சுரண்டப்பட்டதோடு, பிளாட்கள் போட்டு விற்பனை செய்யப்பட்டிருப்பதும் அந்த பிளாட்களில் கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அன்னபிரகாஷ்

இந்த நில மோசடி குறித்து பெரியகுளம் சப்-கலெக்டர் ரிசப், தேனி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதனடிப்படையில் மோசடி நடைபெற்ற அதிமுக ஆட்சியில் பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியர்களாக பணிபுரிந்த ஆனந்தி, ஜெயப்பிரிதா, பெரியகுளம் வட்டாட்சியர்கள் கிருஷ்ணகுமார், ரத்தினமாலா, மண்டல துணை வட்டாட்சியர்கள் சஞ்சீவ் காந்தி, மோகன்ராம், நில அளவையர்கள் பிச்சை மணி, சக்திவேல், நில அளவையர், உதவியாளர்கள் அழகர், ராஜேஷ் கண்ணன், மற்றும் அரசு நிலத்திற்கு பட்டா மாறுதல் பெற்ற அதிமுக முன்னாள் பெரியகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் உள்ளிட்டோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

Also Read: தேனி: அரசு நிலத்துக்கு பட்டா... சஸ்பெண்ட் அதிகாரியின் வீடியோ! - ஆதாரங்களை அழிக்க முயற்சியா?

இதற்கிடையே பட்டா மாறுதலில் நடைபெற்ற மெகா மோசடி தொடர்பான இந்த வழக்கை ஜனவரி 4 -ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி சரவணன் தலைமையில் அதிமுக பிரமுகர், நில அலவையர்கள், வட்டாட்சியர், அலுவலக உதவியாளர்களிடம் விசாரணை நடைபெற்று வந்தது.

பிச்சைமணி

இந்நிலையில் அதிமுக முன்னாள் பெரியகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், நில அளவையர் பிச்சைமணி, பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலக உதவியாளர் அழகர் ஆகியோரை தேனி சிபிசிஐடி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், போடி தொகுதி எம்எல்ஏவுமான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் நில மோசடி செய்த அவரின் ஆதரவாளர் சிபிசிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பதால் பெரியகுளம் அதிமுகவினரும் கலக்கத்தில் உள்ளனர்.



from Latest News

No comments