Breaking News

பெங்களூரு: சொத்து வரி பாக்கி... மான்யதா தொழில்நுட்ப பூங்காவுக்கு சீல் வைத்த மாநகராட்சி!

இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப பூங்காக்களில் ஒன்றான மான்யதா தொழில்நுட்ப பூங்காவின் உரிமையாளர்களிடம் சொத்து வரி பாக்கியை செலுத்துமாறு பெங்களூரு மாநகராட்சி பலமுறை நோட்டீஸ் மற்றும் நினைவூட்டல்களை அனுப்பி வந்தது. இதனிடையே 70 கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்துவரியை செலுத்தாததால் பிப்ரவரி 1-அன்று சீல் வைக்கப்பட்டது மான்யதா தொழில்நுட்ப பூங்கா.

பெங்களூரு நாகவாராவில் உள்ள மன்யாதா தொழில்நுட்ப பூங்கா, நாட்டின் மிகப்பெரிய மற்றும் பழமையான மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களில் ஒன்றாகும். 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழில்நுட்ப பூங்காவில் உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.

tax

காக்னிசண்ட், பிலிப்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், ஐபிஎம், லார்சன் & டூப்ரோ போன்றவை சில முக்கிய நிறுவனங்கள். 2001 -ல் நிறுவப்பட்ட இந்த தொழில்நுட்ப பூங்கா பல்வேறு அலுவலகங்களில் சுமார் 1,50,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது. தொழில்நுட்ப பூங்காவின் உரிமையாளர்களுக்கு சொத்து வரி பாக்கியை செலுத்துமாறு பெங்களூரு மாநகராட்சி பலமுறை நோட்டீஸ் மற்றும் நினைவூட்டல்களை அனுப்பி வந்தது. இதனிடையே சொத்துவரியை செலுத்தாததால் பிப்ரவரி 1-அன்று சொத்து வரி செலுத்த தவறிய உரிமையாளர்கள் மீது சுமார் ரூ. 70 கோடிக்கு மேல் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தொழில்நுட்ப பூங்காவின் கதவுகளுக்கு பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி இணை ஆணையர் பூர்ணிமா கூறுகையில், "டெக் பார்க் உரிமையாளர்கள் நிலுவையில் உள்ள 70 கோடி சொத்து வரியை செலுத்தத் தவறியதால், முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தோம். சமீபத்தில் வரி திருத்தப் பணியை முடித்தபோது, ​​செலுத்தாத விவகாரம் தெரியவந்தது. இத்தனை நாள்களாக வரி செலுத்தாததால், சீல் வைக்கவேண்டியதாகிவிட்டது. அதோடு அவர்களுக்கு வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.

வரி செலுத்தாதது தொடர்பான சிக்கல்களை தொழில்நுட்ப பூங்கா எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. 2016 -ம் ஆண்டிலும், வேறுபட்ட வரிகளை செலுத்தாததற்காக தொழில்நுட்ப பூங்காவிற்குள் உள்ள அலுவலகங்களில் இருந்த பொருள்களை பறிமுதல் செய்ய பெங்களூரு மாநகராட்சி லாரிகளுடன் வந்திருந்தது குறிப்பிடதக்கது .

இதுகுறித்து மான்யதா டெக் பார்க் நிர்வாகத்தினர் கூறுகையில், "பெங்களூர் மாநகராட்சிக்கு எதிராக மான்யதா டெக் பார்க் நிறுவனத்தினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த சொத்துவரி தொடர்பான வழக்கு தற்போது கர்நாடக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அதுவரை இதுகுறித்து மேலும் கருத்து தெரிவிக்க முடியாது'' என்றனர்.



from Latest News

No comments