Breaking News

``உலகளவில் நடக்கும் இணைய முடக்கம் மனித உரிமையைப் பறிக்கிறது" - ஐ.நா சபை

கலவரம், அல்லது போராட்டம் போன்றவை நடைபெறும் போது போராட்டத்தை, கலவரத்தை கட்டுப்படுத்த இணைய முடக்கத்தை அரசுகள் கையாள்கின்றன. இந்நிலையில், ஐ.நா சபையின் ஐ.நா உரிமைகள் அலுவலகம் இதற்கு எதிராக சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் மிச்செல் பச்லெட் வெளியிட்ட அறிக்கையில், "உலகளவில் நடைபெறும் இணைய முடக்கம் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

மேலும், அது மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையையும் மனித உரிமைகளையும் பாதிக்கிறது. அவசரக் காலங்களில் மருத்துவமனைகள் தங்கள் மருத்துவர்களைத் தொடர்பு கொள்ள முடியாதது, வாக்காளர்கள் வேட்பாளர்கள் பற்றிய தகவல் முடக்கப்படுவது, கைவினைப்பொருட்கள் தயாரிப்பாளர்கள், வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து துண்டிக்கப்படுவது மற்றும் அமைதியான போராட்டக்காரர்கள் வன்முறை தாக்குதலுக்கு உள்ளாகும் போது உதவிக்கு யாரையும் அழைக்க முடியாமல் இருப்பது உள்ளிட்டவை இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் நிறுத்தப்படும் போது ஏற்படும் சில பாதிப்புகள்.

இணைய முடக்கம்

பல மனித உரிமைகளை நிறைவேற்றுவதற்கு டிஜிட்டல் உலகம் இன்றியமையாததாக மாறிவிட்ட காலத்தில் இணைய முடக்கம் நடைபெற்று வருகிறது. நீண்ட காலத்திற்கு இணையத்தை முடக்குவது பொருள் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் சேதத்தை ஏற்படுத்துகிறது. இணையத்தை முடக்குவது பொருளாதாரத்தைத் தடைசெய்வது மட்டுமல்லாமல், மன அதிர்ச்சியையும் ஏற்படுத்தலாம், ஏனெனில் இது மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை தொடர்புகொள்வதற்கும், அவர்களின் வேலையைத் தொடர்வதற்கும் அல்லது அரசியல் விவாதங்கள் அல்லது முடிவுகளில் பங்கேற்பதற்கும் உள்ள ஒரே வழியை இல்லாமல் செய்கிறது.

எனவே, இணையத்தை முடக்குவது, பொருள் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் கணக்கிட முடியாத சேதத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மாநிலம் இணையத்தை முடக்கினால், மக்களும் பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றனர். வேலைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் பங்கேற்புக்கான செலவுகள் எப்போதும் எதிர்பார்த்த நன்மையை விட அதிகமாக இருக்கும். அதனால் ஐநா உரிமைகள் அலுவலகம் இணைய முடக்கத்திற்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்க விரும்புகிறது. இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணைய முடக்கம்!

2019 முதல் குறிப்பிடத்தக்க வகையில், இணையத்தை முடக்குவதில் இந்தியா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. சாப்ட்வேர் ஃப்ரீடம் லா சென்டரால் (எஸ்எஃப்எல்சி) பராமரிக்கப்படும் இன்டர்நெட் ஷட் டவுன்ஸ் எனப்படும் இன்டர்நெட் டிராக்கர், இந்தியாவில் 2012 முதல் இதுவரை மொத்தம் 550 இணைய முடக்கங்கள் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



from Latest News

No comments