Breaking News

``செல்பவர்கள் செல்லட்டும்; புதிய சிவசேனாவை உருவாக்குவோம்” - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்ததால் சிவசேனா இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிவசேனாவில் உள்ள பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சென்றுவிட்டனர். இதனால் தற்போது சிவசேனாவில் சொற்ப எம்.எல்.ஏ.க்களே இருக்கின்றனர். தெலுங்கு தேசம் கட்சியில் என்.டி.ராவ்ராவிற்கு ஏற்பட்ட நிலை தற்போது உத்தவ் தாக்கரேயிக்கு ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் உத்தவ் தாக்கரே தனது கட்சி கவுன்சிலர்கள் மத்தியில் ஆன்லைன் மூலம் உரையாற்றினார். அதில், ``சிவசேனா தொண்டர்கள் தான் எனது சொத்து. அவர்கள் என்னுடன் இருக்கும் வரை மற்றவர்களின் விமர்சனத்தை பற்றி நான் கவலைப்படப்போவதில்லை. தேர்தலில் போட்டியிட பலர் விரும்பிய போதும் தற்போது கட்சியை விட்டு சென்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தோம். சிவசேனா தொண்டர்களின் கடின உழைப்பில் வெற்றி பெற்றவர்கள் இன்று அதிருப்தியாளர்களாக மாறியிருக்கின்றனர்.

கூட்டணி கட்சிகளின் புகார்களை கவனித்துக்கொள்ளும்படி ஏக்நாத் ஷிண்டேயிடம் நான் தெரிவித்திருந்தேன். எம்.எல்.ஏ.க்கள் பாஜக-வுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வதாக ஏக்நாத் ஷிண்டே என்னிடம் தெரிவித்தார். உடனே அவ்வாறு நிர்ப்பந்தம் செய்யும் எம்.எல்.ஏ.க்களை என்னிடம் அழைத்து வரும்படி கேட்டுக்கொண்டேன். பாஜக எங்களை மோசமாக நடத்தியது. சொன்ன வார்த்தையை காப்பாற்றவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு அவர்கள் மீது வழக்கு இருக்கிறது. பாஜக-வுக்குச் சென்றால் அவ்வழக்குகளில் இருந்து விடுபட்டுவிட முடியும்.

ஏக்நாத் ஷிண்டே

அவர்கள் எங்களுடன் இருந்தால் சிறைக்கு செல்லவேண்டும். இதுதான் கூட்டணி தர்மமா?. சிவசேனா தொண்டர் ஒருவர் முதல்வராக மாறுவதாக இருந்தால் நீங்கள் செல்லுங்கள். என்னால் கட்சியை நடத்த முடியவில்லை என்று சிவசேனா தொண்டர்கள் நினைத்தால் நான் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.

இந்துக்களின் வாக்குகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பாததால் பாஜக, சிவசேனாவை அழிக்க பார்க்கிறது. இந்துக்கள் வாக்கு பிரியக்கூடாது என்பதற்காகத்தான் மறைந்த கட்சி தலைவர் பால் தாக்கரே பாஜகவுடன் கூட்டணி வைக்க நடவடிக்கை எடுத்தார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு இப்போது வேறு வழியில்லை. அவர்கள் பாஜக-வுடன்தான் சேரவேண்டும். அப்படி சேர்ந்து ஆட்சி அமைத்தாலும் அது நீண்ட நாள்களுக்கு நிலைக்காது. ஏனென்றால் பல எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது. சிவசேனா வாக்குகளை இழுத்துப்பாருங்கள் பார்க்கலாம்.

தேர்தலில் வெற்றி பெற்றவர்களை அழைத்து சென்றுவிட்டீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்களை தேர்ந்தெடுத்தவர்களையும் அழைத்து செல்லுங்கள். செல்லவேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக செல்லலாம். நாங்கள் புதிய சிவசேனாவை உருவாக்குவோம்” என்று தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே

சிவசேனா நிர்வாகிகள் கூட்டம்

இன்று சிவசேனா தேசிய நிர்வாகிகள் கூட்டம் மும்பை தாதரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே ஆன்லைன் மூலம் உரையாற்ற இருக்கிறார். கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதால் அவரால் கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே வெள்ளிக்கிழமை கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதிலும் உத்தவ் தாக்கரே ஆன்லைன் மூலமே உரையாற்றினார். அஸ்ஸாமில் தங்கி இருக்கும் ஏக்நாத் ஷிண்டே இன்று அல்லது நாளை மும்பை திரும்புவார் என்று தெரிகிறது. ஆளுநர் கொஷாரியாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். அவரும் குணமடையட்டும் என்று பாஜக காத்துக்கொண்டிருக்கிறது. ஏக்நாத் ஷிண்டேயை சிவசேனா பல வகையில் சமாதானப்படுத்த முயன்றது. ஆனால் தனது முடிவில் ஷிண்டே உறுதியாக இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.



from Latest News

No comments