Breaking News

Doctor Vikatan: முகத்தில் உள்ள அம்மைத் தழும்புகளை நீக்க முடியுமா?

Doctor Vikatan: என் வயது 25. சிறுவயதில் அம்மை வந்ததால் ஏற்பட்ட தழும்புகளும், வடுக்களும் முகம் முழுவதும் உள்ளன. விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இந்த முகத் தழும்புகளை நிரந்தரமாகப் போக்க ஏதேனும் சிகிச்சைகள் உள்ளனவா? எத்தனை நாள்களில் பலன் தெரியும்?

சருமநல மருத்துவர் பூர்ணிமா

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சிறுவயதில் உங்களுக்கு அம்மை வந்ததால் ஏற்பட்ட தழும்புகள் என்பவை பழைய வடுக்கள். அடிபட்டதாலோ, வேறு காரணங்களாலோ சமீபத்தில் வந்தவையல்ல. அம்மை வடுக்கள் சருமத்தின் ஆழத்தில் உள்ள லேயர்வரை பாதித்திருக்கும்.

இத்தகைய ஆழமான, பழைய வடுக்களையும் தழும்புகளையும் வெறும் க்ரீமை மேல்பூச்சாகப் பயன்படுத்தி ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ மாற்றுவது சாத்தியமில்லை. அது பலவித சிகிச்சைகளை உள்ளடக்கி அணுகப்பட வேண்டியது.

அதாவது, மேல்பூச்சுக்கு க்ரீமும் உபயோகிக்க வேண்டியிருக்கும். லேசர் அல்லது மைக்ரோ நீட்லிங் அல்லது ஃபில்லர்ஸ் போன்ற சிகிச்சையையும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். தழும்பின் ஆழத்தின் தன்மையைப் பார்த்துதான் அதை முடிவுசெய்ய முடியும்.

சருமப் பாதுகாப்பு - சித்தரிப்பு படம்

ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் பிரச்னை மற்றும் அதன் தீவிரத்தைப் பொறுத்தே சிகிச்சையைத் தீர்மானிக்க முடியும். உங்கள் விஷயத்தில் அம்மையால் ஏற்பட்ட தழும்பு என்பதால், தழும்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மைக்ரோ நீட்லிங் அல்லது ஃபில்லர்ஸ் சிகிச்சை செய்யலாம்.

தழும்புகள் வந்த சருமத்தை முழுவதுமாக பழையநிலைக்கு மாற்ற முடியுமா என்றால் முடியாது. தழும்புகளின் ஆழத்தைப் பொறுத்து 60 முதல் 70 சதவிகிதம் வரை மாற்றத்தை எதிர்பார்க்கலாம். ரொம்பவும் ஆழமான தழும்புகள் என்றால் 40 சதவிகித மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

சரும சிகிச்சை

நீங்கள் சரும மருத்துவரை நேரில் அணுகி உங்கள் பிரச்னைக்கான ஆலோசனைகளைக் கேட்டறியலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News

No comments