Breaking News

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற`1984 கலவர வழக்கு’... இரு குற்றவாளிகளை கைது செய்த எஸ்.ஐ.டி!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தில் 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்தது. அதைத் தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை மீண்டும் விசாரிக்க மத்திய அரசால் 2019 -ல் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கான்பூரின் டபௌலி பகுதியில் வசித்த விசாகா சிங், அவரின் மனைவி, மகள், நான்கு மகன்கள் கொலை செய்யப்பட்டனர். மேலும், அவர்களின் உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தம்பதியரின் மற்ற இரண்டு மகன்களும் எப்படியோ தப்பித்து, காவல்துறையிடம் தங்கள் வாக்குமூலங்களை பதிவு செய்தனர். அவர்கள்தான் இந்த வழக்கில் நேரில் பார்த்த சாட்சிகள்.

சீக்கியர் கலவர வழக்கு

இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை நேற்றிரவு சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. இந்த கலவர வழக்கில் இதுவரை 15 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 58 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தொடர்பாக புலனாய்வுக்குழு கூறியதாவது,"கான்பூரின் டபௌலி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர்களான யோகேஷ் சர்மா (65) மற்றும் பாரத் ஷர்மா (60) ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் மற்ற குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணை மேற்கொள்வோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.



from Latest News

No comments