Breaking News

திருமணம் மீறிய உறவு... அதிக அளவு மதுகொடுத்து விவசாயியைக் கொன்ற பெண் - காரணம் என்ன?!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள திடுமல் ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ் (வயது: 50). விவசாய வேலைகள் செய்வதோடு, இவர் இரண்டு ஆம்னி வேன்களை வைத்து, அவற்றை வாடகை விடும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு காலாராணி என்பவரோடு திருமணமாகி, தினேஷ், தருண் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தாளக்கரை பகுதியில் வசிக்கும் சுதா (வயது: 45) என்பவர் வீட்டில் செல்வராஜ் மர்மமான முறையில் உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து, தகவலறிந்த செல்வராஜின் மனைவி கலாமணி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

செல்வராஜ்

தொடர்ந்து, நல்லூர் காவல்நிலைய போலீஸார் அங்கு விரைந்து வந்து, செல்வராஜின் உடலை கைப்பற்றினர். அவரின் உடலை, உடற்கூராய்வு செய்வதற்காக, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த நல்லூர் காவல் நிலைய போலீஸார் சுதாவை கைதுசெய்து, அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

அவர்களின் விசாரணையில், செல்வராஜூக்கும், மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் சுதாவிற்கும் கடந்த 5 ஆண்டுகளாக திருமணம் மீறிய உறவு இருந்ததது தெரியவந்திருக்கிறது. நேற்று முன் தினம் சுதா வீட்டிற்குச் சென்ற செல்வராஜ் மரணமடைந்துள்ள நிலையில், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து நல்லூர் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், சுதாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டார். இந்த நிலையில், சுதாவுக்கு மற்றொரு ஆண் நண்பருடன் தொடர்பு இருந்ததாகவும், அந்த தொடர்பை நிறுத்திக்கொள்ளுமாறு கூறிய செல்வராஜ், 'அவனுடன் பழகக் கூடாது... பேசக்கூடாது' என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சுதா

இதனால் கோபமடைந்த சுதா, செல்வராஜூக்கு அதிக மதுவைக் கொடுத்து போதை மயக்கத்தில் தான் கட்டியிருந்த சேலையால் கழுத்தை இருக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனால், சுதாமீது கொலை வழக்கு பதிவுசெய்த போலீஸார், பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தன்னிடன் திருமணம் மீறிய உறவில் இருந்த விவசாயிக்கு பெண் ஒருவர் அதிக மதுவை அருந்தவைத்து, சேலையால் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



from Latest News

No comments