Breaking News

துபாயிலிருந்து வந்தவர்... பணத்துக்காக மும்பை விமான நிலையத்திலிருந்து புதுச்சேரி கடத்திய கும்பல்!

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த சங்கர்(47) என்பவர் துபாயில் வேலை செய்து வந்தார். அவர் கடந்த 22-ம் தேதி துபாயிலிருந்து மும்பை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து பஸ் மூலம் தெலங்கானா செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் திட்டமிட்டபடி அவர் தெலங்கானா செல்லவில்லை. இதனால் அவரது மகன் ஹரீஷ் சந்தேகப்பட்டு மும்பை வந்து சங்கர் டிக்கெட் முன் பதிவு செய்திருந்த டிராவல் ஏஜென்சிக்கு சென்று விசாரித்த போது, சங்கர் வேறு ஒருவருடன் வந்து முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு சென்று இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சங்கர் எங்கு சென்றார் என்பது குறித்து ஹரீஷ் தேட ஆரம்பித்தார். இதனிடையே திடீரென கடந்த 24-ம் தேதி சங்கர் தனது மகனுக்கு போன் செய்து தான் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவித்தார்.

சங்கர்

மேற்கொண்டு எந்த தகவலையும் கேட்கும் முன்பு போனை வைத்துவிட்டார். இதனால் ஹரீஷ் மும்பை போலீஸில் இது குறித்து தெரிவித்து புகார் செய்தார். அதோடு கடந்த 28-ம் தேதி மர்ம நம்பரில் இருந்து ஹரீஷுக்கு போன் அழைப்புகள் வந்தது. அதில் சங்கரை விடுவிக்கவேண்டுமானால் 15 லட்சம் கொடுக்கவேண்டும் என்று மர்ம நபர் கேட்டார். இதையடுத்து ஹரீஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் கடத்தல் புகாராக பதிவு செய்தனர். போலீஸார் போன் எங்கிருந்து செய்யப்படுகிறது என்பதை கண்டுபிடித்தனர். கடத்தல்காரர்கள் திருச்சியில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தனிப்படை போலீஸார் திருச்சி சென்று தேட ஆரம்பித்தனர். அதற்குள் கடத்தல்காரர்கள் சங்கரை புதுச்சேரிக்கு மாற்றிவிட்டனர். திருச்சியில் கடத்தல்காரர்களின் உறவினர்கள் சிலரை பிடித்து விசாரித்தனர். கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் போனையும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். திடீரென கடத்தல்காரர்கள் போலீஸாரை தொடர்பு கொண்டு சங்கர் இருக்கும் இடத்தை தெரிவித்தனர். சங்கரை காரைக்காலில் விட்டுவிட்டுச் சென்று இருந்தனர். அவரை தேடி கண்டுபிடிப்பது மும்பை போலீஸாருக்கு மிகவும் சவாலாக இருந்தது. உள்ளூர் போலீஸாரின் துணையோடு சங்கரை கண்டுபிடித்தனர். சங்கர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.

கடத்தல்

கடத்தல்காரர்களின் உறவினர்களை தொடர்பு கொண்டவுடன் அவர்கள் பயத்தில் சங்கரை விட்டுவிட்டு தப்பி சென்றனர் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் தெரிவித்தார். சங்கரை கடத்திய இரண்டு பேரை போலீஸார் தேடி வருகின்றனர். சங்கர் துபாயில் இருந்து வரும் போது 11 லட்சம் மதிப்பு பணத்துடன் வந்துள்ளார். அவருடன் விமானத்தில் வந்த ஒருவரின் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரிடம் சங்கர் தான் துபாயில் சம்பாதித்தது குறித்து தெரிவித்துள்ளார். அதனை பறிக்கும் நோக்கில் அவரை மும்பையில் இருந்து திருச்சிக்கு கடத்தியுள்ளார். மும்பை போலீஸார் ஒரு வாரம் புதுச்சேரியில் தங்கி இருந்து சங்கரை மீட்டுள்ளனர்.



from Latest News

No comments