அமித் ஷா: 40 தொகுதிகள் முதல் ரஜினியின் முடிவு வரை... நள்ளிரவைத் தாண்டி நீடித்த ஆலோசனை!
அமித் ஷாவின் தமிழக விசிட்!
மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான அமித் ஷா, அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று மதியம் சென்னை வந்தார். நேற்று மாலை 4.30 மணிக்கு கலைவாணர் அரங்கில் அரசு நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் ஹோட்டலில் அமித் ஷாவை 4 மணி அளவில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். நேற்று முந்தினம் அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் ஜெயக்குமார், அமித் ஷா சந்திப்பு முக்கியத்துவம் பெற்றதாகவே பார்க்கப்பட்டது. இதில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகள் குறித்து பேசபட்டிருக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் பா.ஜ.க - அ.தி.முக கூட்டணி தொடரும் என்று அறிவித்தார். தொடர்ந்து பேசிய அமித் ஷா, தமிழக அரசை பாராட்டியும் தி.மு.க வை கடுமையாக விமர்சித்தும் பேசினார்.
கூட்டம் முடிந்த பின்னர் அமித் ஷா தான் தங்கியிருக்கும் தனியார் ஹோட்டலுக்கு சென்றார். அமித்ஷா சென்ற சில நிமிடங்களில் அதே ஹோட்டலுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் சென்றனர். அவர்களுடன் தேர்தல் தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் உள்பட முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியனது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கூட்டணி தொடர்பாகவும், கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாகவும் தீவிர ஆலோசனை மேற்கொண்டார் அமித் ஷா. தொடர்ந்து பா.ஜ.க மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆகியோருடன் தேர்தல் வியூகங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். அப்போது அமித் ஷா, `கூட்டணியை நாங்கள் பார்த்து கொள்கிறோம். தேர்தல் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்’ என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்போது முதலே தீவிரமாக செயல்பட்டால், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்திலும் அதிக பலம் வாய்ந்த கட்சியாக பா.ஜ.க மாறும் என்றும் தெரிவித்தாராம் அமித் ஷா.
Also Read: `ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கிறேன்; அரசியல் பேசாமல் எப்படி?!’ - அரசு விழாவில் அமித் ஷா அதிரடி
குருமூர்த்தியுடன் நள்ளிரவு வரை நீடித்த ஆலோசனை!
தொடர்ந்து அமித் ஷா, ஆடிட்டர் குருமூர்த்தி உடன் ஆலோசனை நடத்தினார். நள்ளிரவை தாண்டி நடைபெற்ற இந்த ஆலோசனையில் தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன், ராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. குருமூர்த்தியுடனான ஆலோசனையில் கள நிலவரம் குறித்தும் ரஜினியின் முடிவு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல். முன்னதாக அமித் ஷா ரஜினியை சந்திப்பார் அல்லது குருமூர்த்தி மூலமாக தொலைபேசி வாயிலாக அமித் ஷா ரஜினியுடன் ஆலோசனை நடத்துவார் என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியானது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லி புறப்படும் அமித் ஷாவை வழியனுப்பவதற்காக அமைச்சர் கே.பி அன்பழகன் வந்துள்ளதாக தகவல் வெளியானது. எனினும் உயர்கல்வித்துறையில் மத்திய அரசு, தமிழக அரசு இடையே பல முரண்பாடுகள் உள்ள நிலையில் இந்த சந்திப்பிலும் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்று காலை 10.45 மணிக்கு அமித் ஷா தனது தமிழக பயணத்தை முடித்து கொண்டு டெல்லி புறப்பட்டார்.
மேலும், பா.ஜ.க அ.தி.மு.க-விடம் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மாவட்டத்துக்கு ஒரு தொகுதி என 40 தொகுதிகள் வரை ஒதுக்குமாறு கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் கூட்டணியில் 25 தொகுதிகள் மட்டுமே கொடுக்க அ.தி.மு.க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
from Latest News
No comments