Breaking News

`ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க ஒருபோதும் அனுமதி கிடையாது!’ - தமிழக அரசு திட்டவட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த 2018-ல் தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் 100-வது நாளில் (மே-22) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதற்காகப் பேரணியாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து (மே 28-ம் தேதி) அரசாணை வெளியிடப்பட்டு, ஆலை சீல் வைத்து மூடப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை நியமித்தது தமிழக அரசு. இந்தச் சம்பவம் குறித்த வழக்கு விசாரணை, சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு பின்னர் சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், ஆலையை சீல் வைத்து மூடிய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது வேதாந்தா நிறுவனம். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை ஆய்வு செய்ய நியமித்தது தீர்ப்பாயம்.

அக்குழு சமர்பித்த ஆய்வறிக்கையின்படி, `சில விதிமுறைகளுடன் மீண்டும் ஆலையைத் திறக்கலாம்’ என தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. `ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை விதித்ததுடன், இந்த வழக்கை விசாரிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு எந்த அனுமதியும் இல்லை’ எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு ஆலைத் தரப்புக்கு அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம். தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் ஆலைத் தரப்பு தொடர்ந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

உச்சநீதி மன்றம்

அதில், `ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு அனுமதி இல்லை, தமிழக அரசின் உத்தரவு செல்லும், அந்த உத்தரவே தொடரும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பு, 815 பக்கங்களைக் கொண்டது. இந்தத் தீர்ப்பு, தூத்துக்குடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்தத் தீர்ப்பை வரவேற்று போராளிகள், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வழக்கறிஞர்கள், கட்சியினர் ஆகியோர் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Also Read: விவசாயி முதல் ஸ்டெர்லைட் விவகாரம் வரை ; எடப்பாடி Vs ஸ்டாலின்...யாருடைய வாதம் மக்களிடம் எடுபடுகிறது?

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தது. முன்னதாக, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பிலும், தமிழக அரசு சார்பிலும், ம.தி.மு.க சார்பிலும் இந்த வழக்கில் கேவியேட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்தநிலையில், தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா, இவ்வழக்கு தொடர்பான 3,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் ஏற்பட்ட காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு, மக்களுக்கு ஏற்பட்ட நோய்கள் தொடர்பான அனைத்து பாதிப்புகள் குறித்தும், ஸ்டெர்லைட் ஆலையின் விதி மீறல்கள் குறித்தும் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை

மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் இந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டுதான், மாநில அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்திருக்கிறது. எனவே, ஆலை நிர்வாகத்துக்கு எந்தச் சலுகை வழங்குவதோ, பராமரிப்பு பணிக்காக அனுமதி அளிப்பதோ கூடாது. அத்துடன் இது தொடர்பான ஆலைத் தரப்பின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அதில் குறிபிடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நவீன் சின்கா மற்றும் ஜோசப் ஆகியோர் அமர்வு வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு வந்தது.

``ஸ்டெர்லைட் ஆலை எந்தவித முன்னறிவிப்பின்றி தமிழக அரசால் திடீரென மூடப்பட்டதால், ஆலைக்குள் இருக்கும் விலையுயர்ந்த இயந்திரங்கள் அனைத்தும் பயனற்றுப் வீணாகி விடும். இதனால், பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும். அதனால், பராமரிப்புப் பணிக்காக மட்டும் இடைக்கால அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என வேதாந்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் மனுசிங்வி மற்றும் ரோத்தகி ஆகியோர் கோரிக்கை வைத்தனர். ``ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி வழங்கிட முடியாது. ஆலையால் பாதிப்பு நூறு சதவீதம் உறுதியான பிறகே, ஆலை சீல் வைத்து மூடப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை

ஆலையால் மக்களுக்கு பிரச்னை ஏற்படாதவாறு அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் பராமரிப்பும், தொடர் கண்காணிப்பும் செய்யப்படுகிறது. அதனால், ஆலைக்கு எவ்வித நிவாரணமும் அளிக்கக்கூடாது. ஆலைத்தரப்பின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்” என அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் வைத்தியநாதன் மற்றும் யோகேஷ் கண்ணா ஆகியோர் கூறினர். இதையடுத்து, பதில் மனு தாக்கல் செய்ய ஆலைத்தரப்பிற்கு அவகாசம் வழங்கியதுடன், விசாரணையை வரும் டிசம்பர் முதல் வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.



from Latest News

No comments