Breaking News

`பிணத்துக்கு சிகிச்சை; நாடகமாடிய மருத்துவர்கள்?’ -திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அதிர்ச்சி

திருப்பத்தூரை அடுத்துள்ள களரூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா (30). இவரது மனைவி நந்தினி (25), தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்துவந்தார். இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது. இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நந்தினிக்கு பிரவச வலி ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அறுவை சிகிச்சை மூலம் நந்தினிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, நந்தினியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், மருத்துவர்கள் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் மிரட்டும் தொனியில் அலட்சியமாக செயல்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை

`சிகிச்சைக்குத் தேவையான மருந்து ஸ்டாக் இல்லை; வெளியில் சென்று வாங்கி வா’ என்று கூறி நந்தினியின் குடும்பத்தினரை செவிலியர்கள் அலைக்கழித்துள்ளனர். இதற்கிடையே, நந்தினி சுயநினைவை இழந்துள்ளார். பதறிப்போன குடும்பத்தினர் வாக்குவாதம் செய்துள்ளனர். அதன்பின்னரே, மருத்துவர்கள் பிரசவ வார்டுக்கு வந்துள்ளனர். நந்தினியைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு தூக்கிச் சென்று பரிசோதனை செய்வதுபோல் மருத்துவர்களும், செவிலியர்களும் பரபரப்பாக செயல்பட்டனர். நந்தினியைப் பார்க்கவிடாமல் அவரது குடும்பத்தினரை வெளியில் நிற்கவைத்துள்ளனர். நீண்டநேரம் கழித்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் நந்தினியை அனுப்பி வைத்தனர்.

Also Read: கடலூர்: இட்லிக்குள் பல்லி! - அரசு மருத்துவமனை கொரோனா நோயாளி அதிர்ச்சி

அப்போதும், நந்தினியின் கணவரிடமும், குடும்பத்தினரிடமும் எந்தத் தகவலையும் மருத்துவர்கள் சொல்லவில்லை. வேலூர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நந்தினியின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், `அவர் இறந்து நான்கு மணி நேரம் ஆகிறது’ என்று அதிர்ச்சியூட்டினர். கொந்தளித்த உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

`நந்தினியின் இறப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம். இறப்பைத் தெரியப்படுத்தினால் மாட்டிக்கொள்வோம் என்பதால் பிணத்துக்கு நீண்ட நேரமாக சிகிச்சை அளித்துள்ளனர்’ என்று உறவினர்கள் குற்றம்சாட்டினர். தகவலறிந்துவந்த போலீஸார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

செவிலியர்கள்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களும், பிரசவித்த தாய்மார்களும் உயிரிழப்பது, இது முதல் முறை கிடையாது. ஏற்கெனவே, பலமுறை நடந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ``பணி நேரத்தில் மருத்துவர்கள் மருத்துவமனையில் இருப்பதில்லை. செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் நோயாளிகளிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள். கடந்த ஆண்டு பிரசவத்துக்கு வந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு செவிலியர்களே பிரசவம் பார்த்தனர். அதுவும், பணி நேரத்தில் வீட்டிலிருந்த மருத்துவர்களிடம் செல்போனில் கேட்டு செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால், அந்த பெண் பரிதாபமாக மரணமடைந்தார். இன்னும் சொல்ல முடியாத அக்கிரமம் நடக்கிறது. மருத்துவத்துறை உயரதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் தனிக் கவனம் செலுத்தி அலட்சியமாக செயல்பட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளனர் திருப்பத்தூர் மக்கள்.



from Latest News

No comments