Breaking News

விழுப்புரம்: `மண் அடித்துச் சென்றதற்கா ரூ.7 கோடி?’ - தடுப்பணை விவகாரத்தில் கேள்வி எழுப்பும் பொன்முடி

கர்நாடக மாநிலத்தில் உருவாகும் தென்பெண்ணை ஆறு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 320 கிலோமீட்டர் பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது. அதில் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மட்டும் 106 கிலோமீட்டர் நீளத்தை கடந்து செல்கிறது. இந்த ஆறு கடக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர், எல்லீஸ் சத்திரம், சொர்ணாவூர் பகுதிகளில் இருக்கும் சிறிய தடுப்பணைகளில் போதுமான நீரை தேக்கி வைக்க முடியாததால், ஒவ்வொரு ஆண்டும் பெருமளவு நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது.

உடைந்த தடுப்பணை

அதனால் விழுப்புரம்-கடலூர் மாவட்டங்களை இணைக்கும் விதமாக புதிய அணைக்கட்டு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று இரு மாவட்ட விவசாயிகளும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. அந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. 400 மீட்டர் நீளமும், 3.1 மீட்டர் உயரமும் கொண்ட அந்த தடுப்பணை, 2020 டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தால் திறந்து வைக்கப்பட்டது.

புதிதாக திறக்கப்பட்ட தடுப்பணையின் சுவர்களின் ஒரு பகுதி ஜனவரி 23-ம் தேதி திடீரென உடைந்து விழுந்தது. தொடர்ந்து அணையில் இருந்த தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அத்துடன் ஒரு மதகும் அடித்துச் செல்லப்பட்டது. தகவலறிந்து அங்கு ஓடிய விவசாயிகளும், பொதுமக்களும் பாறைகளைக் கொண்டு அணை உடைப்பை சரிசெய்ய முயற்சித்தனர். அந்த முயற்சியில் தோல்வியடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்தனர்.

தென்பெண்ணையாறு

அதன்பிறகு அதிகாரிகள் வந்து தடுப்பணையை ஆய்வு செய்யாததால், நேற்று முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ, சபாராஜேந்திரம் எம்.எல்.ஏ இருவரும் தி.மு.க தொண்டர்களுடன் தென்பெண்ணையாற்றில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு மதியம் 12 மணிக்கு அங்கு வந்த அதிகாரிகள் தடுப்பணை உடனே சரிசெய்யப்படும் என்று கூறியதையடுத்து போராட்டம் கைவிட்டப்பட்டது.

தொடர்ந்து விழுப்புரம் செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்துப் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “அணை உடையவில்லை. சேதம் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. சேதமடைந்த தடுப்புச் சுவரை கட்ட ரூ.7 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் தடுப்புச் சுவர் கட்டப்படும்” என்றார்.

பொன்முடி போராட்டம்

இந்நிலையில் தடுப்பணை உடைந்த விவகாரம் தொடர்பாக தலைமைப் பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் ஜவகர், உதவி செயற்பொறியாளர் சுமதி உள்ளிட்ட 4 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக பொதுப்பணித்துறை.

இந்த விவகாரம் குறித்து விகடனிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, “தடுப்பணை உடையவில்லை, வெறும் மண்தான் அடித்துச் சென்றிருக்கிறது என்று நேற்று பேட்டி கொடுத்திருக்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

Also Read: `வாயலூர் தடுப்பணை யாருக்காகக் கட்டப்படுகிறது?’ - கேள்வி எழுப்பும் சூழல் ஆர்வலர்கள்

ஆனால் ஒரு மதகே அடித்துச் சென்றிருக்கிறது. அவர் கூறுவது போல வெறும் மண்தான் அடித்துச் சென்றது என்றால், எதற்காக அரசிடம் ரூ.7 கோடி கேட்கிறார் என்று தெரியவில்லை. தடுப்பணை உடைந்த விவகாரத்தை உடனடியாக விசாரணை செய்து அதற்குக் காரணமானவர்கள் அதிகாரிகளா அல்லது ஒப்பந்ததாரர்களா என்பதைக் கண்டறிய வேண்டும். தடுப்பணை கட்டிய ஒப்பந்தக்காரர் மீதுதான் முதல் தவறு இருக்கிறது. ஆனால் அந்த தடுப்பணையை கட்டிய ஒப்பந்தக்காரர் தற்போது வேறொரு தடுப்பணை கட்டி வருகிறாரம். இப்படி இருந்தால் என்னவென்று சொல்வது?” என்றார்.



from Latest News

No comments