Breaking News

தஞ்சாவூர்: `கையில் வேல்.. தேர்தலில் வெற்றி என்கிற ஸ்டாலின் கனவு பலிக்காது!’ - ஜி.கே.வாசன்

`கையில் வேலை எடுத்தால் தேர்தலில் வென்று விடலாம் என்கிற ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது. வேலுக்கு பயபக்தியுடன் மரியாதை செலுத்துபவர்கள் தான் தேர்தலில் வெல்ல முடியும். தி.மு.க.,சூரசம்ஹாரத்தில் நம்பிக்கை உள்ளதாக கூறுவதே, தேர்தலில் ஓட்டுக்காக தான்’ என தஞ்சாவூரில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ஜி.கே.வாசன்

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சாவூரில் தனியார் ஹோட்டல் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் த.மா.காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடையே ஆலோசனை நடத்தினார்.

பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, ``டெல்டா மாவட்டத்தில் பாதித்த அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி, பயிர் காப்பீடு வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நெல்லுக்கு ஈரப்பதம் பிடிக்காமல் முழு தொகையையும் வழங்க வேண்டும். வருகிற சட்டசபை தேர்தலில், ஆளுகின்ற அ.தி.மு.க.,வின் கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதற்கு ஏற்றவாறு தொடர்ந்து அனைத்து துறைகளிலும் தமிழக அரசு அதனை சார்ந்த பணிகளை மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு பிரதிபலித்து கொண்டுள்ளது.

வாசன்

ஆளுங்கட்சியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குறை கூறி வருவது ஏற்புடையது அல்ல. அது மக்களிடம் ஒருபோதும் எடுபடாது. கையில் வேலை எடுத்தால் தேர்தலில் வென்று விடலாம் என ஸ்டாலின் நினைத்து கொண்டுள்ளார். கையில் வேலை எடுத்தவர்கள் எல்லாம் தேர்தலிலே வெற்று விடலாம் என்கிற ஸ்டாலின் கனவு ஒரு போதும் பலிக்காது. அவர் வெற்றியும் பெற்று விட முடியாது.

வேலுக்கு பயபக்தியுடன் மரியாதை செலுத்துபவர்கள் தான் தேர்தலில் வெல்ல முடியும். தி.மு.க., சூரசம்ஹாரத்தில் நம்பிக்கை உள்ளதாக கூறுவதே, தேர்தலில் ஓட்டுக்காக தான். மக்களின் பக்தியை தேர்தலில் வாக்குக்காக யாரும் ஏமாற்றி விட முடியாது. மக்களிடம் மனுக்கள் பெற்று 100 நாட்களில் தீர்வு காணப்படும் என ஸ்டாலின் கூறுவது அரசியல் நாடகம். ஆக்கபூர்வமான நடவடிக்கையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஜி.கே.வாசன்

கொரோனா தடுப்பூசி மக்களுக்கு தொடர்ந்து நம்பிக்கையை கொடுத்துள்ளது. மக்கள் ஆட்சியில் மக்களுக்கு தான் முதலில் தடுப்பூசி என மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதில் எதிர் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் இல்லை. டெல்லியில் இரண்டு மாநில விவசாயிகள் மட்டுமே போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய தவறான போக்கால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கிடைக்ககூடிய பலன் தடைபடுகிறது என்பதை, போராடும் விவசாயிகள் உணர்ந்து செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகளின் தவறான பாதையில் விவசாயிகள் செல்லக்கூடாது.

அரசு விவசாயிகளுக்கு கொடுத்துள்ள சிறப்பான திட்டத்தை பயன்படுத்தி அவர்கள் முன்னேறக் கூடிய நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கை கடற்படை நம்முடைய தமிழக மீனவர்களை அடக்க நினைக்கிறது, ஒடுக்க நினைக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்பு நம்முடைய மீனவர்களை இழக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த அச்சத்தை மத்திய அரசு போக்க வேண்டும். இலங்கை அரசுடன் பேசி இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

ஒவ்வொரு கட்சியினுடைய தலைவரும், அவர்களுடைய கட்சியின் மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பது தவறு கிடையாது. தே.மு.தி.க.,வை பொறுத்தவரையிலே கூட்டணி கட்சி என்ற முறையில் அவருடைய கருத்தை அக்கறையோடு தெரிவித்திருக்கிறார்கள். பா.ம.க., அ.தி.மு.க.,வின் மிக முக்கியமான கூட்டணி கட்சி. பா.ம.க.,கொடுத்துள்ள கோரிக்கையை தமிழக அரசு முக்கியத்துவத்துடன் பரீசிலனை செய்யும். சின்னம் பிரச்னை எல்லாம் தி.மு.க., கூட்டணியில் தான்.அ.தி.மு.க., கூட்டணியில் ஒரு போதும் சின்னம் பிரச்னை கிடையாது.

‘எங்கள் நிலைப்பாட்டை அ.தி.மு.க-விடம் தெரிவித்துவிட்டோம்’ - கூட்டணிகுறித்து ஜி.கே. வாசன்

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில், அதனுடைய அகில இந்திய தலைவர்கள் பல மாநிலங்களுக்குச் சென்று பிரசாரத்தை மேற்கொள்வது வழக்கமான ஒன்று. சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்திலும் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டனர் ஆனால் பா.ஜ.க., கூட்டணி தான் வென்றது. தேர்தல் நெருங்கும் நேரத்தில், முக்கிய கட்சிகள் கூட்டணி கட்சிகளை அழைத்து பேசும் போது, கூட்டணி கட்சிகள் பலனுக்கு, நலனுக்கு ஏற்ப தொகுதிகளைப் பெற்று கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவோம்” என்றார்.



from Latest News

No comments