திருவள்ளூர்: `தண்டவாள மின்கம்பத்தில் தொங்கிய சடலம்... கொலையா, தற்கொலையா?!' - போலீஸ் தீவிர விசாரணை
திருவள்ளூர் - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூர் ரயில் நிலையத்தை அடுத்த ஏகாட்டுர் ரயில்நிலையத்துக்கு அருகில், இன்று காலை ஆண் சடலம் ஒன்று, தண்டவாள மின்கம்பத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, அரக்கோணம் ரயில்வே இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, திருவள்ளூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின் தலைமையில் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, மின்கம்பத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் ரயில்வே போலீஸாரிடம் கேட்டபோது, ``இன்றுகாலை திருவள்ளூர் - ஏகாட்டூர் ரயில்வே மார்க்கத்தில் தண்டவாளத்தில் ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக, எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, உடனடியாக அரக்கோணம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, சம்பவ இடத்துக்கு விரைந்தோம். தண்டவாள மின்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த சடலத்தைக் கீழே இறக்கினோம். அந்த நபர், தான் அணிந்திருந்த லுங்கியைப் பயன்படுத்தித் தூக்கிட்டிருந்தார். அந்த நபருக்கு சுமார் 50 வயது இருக்கும்.
அவர் சட்டைப் பாக்கெட்டில் சென்னை மாம்பலத்திலிருந்து திருத்தணி வரை செல்வதற்கான நேற்றைய தேதியிட்ட ரயில்வே டிக்கெட் இருந்தது. தூக்கில் தொங்கிய நபரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால், இது தற்கொலை போலத் தான் தெரிகிறது. இருப்பினும், உயிரிழந்த நபர் கொலைசெய்யப்பட்டு, ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் ரயில்வே மின்கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறோம். அதனால், மர்ம மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். தொடர்ந்து, இறந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் எனத் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். முதற்கட்டமாக, ஏகாட்டுர் ரயில்வே நிலையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்யவிருக்கிறோம். உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்திருக்கிறோம். அதன் பிறகே தற்கொலையா, கொலையா என்பது தெரியவரும்" என்றனர்.
Also Read: திருவள்ளூர்: கணவரைப் பிரிந்த பெண்; ஆத்திரத்தில் குடும்பத்தினர்! - வழக்கறிஞர் கொலையில் நடந்தது என்ன?
from Latest News
No comments