`தலைக்கேறிய மது போதை; பக்கத்து வீட்டில் நிர்வாணமாக நுழைந்த நீலகிரி அதிமுக முன்னாள் எம்.பி!'
நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். அதிமுக-வைச் சேர்ந்த இவர் குன்னூர் நகராட்சி தலைவராகப் பதவி வகித்திருக்கிறார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவருக்கு நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார். அந்த தேர்தலில் கோபாலகிருஷ்ணனை எதிர்த்து திமுக சார்பில் ஆ.ராசா போட்டியிட்டார். இருப்பினும், நீலகிரியில் ராசாவை வீழ்த்தி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரானார். ஆனால், தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, தொகுதிக்கு எந்த விதமான நலத்திட்டங்களையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு கோபாலகிருஷ்ணன் மீது பரவலாக முன்வைக்கப்பட்டது. அதேபோல், இவர் எம்.பி-யாக இருந்த நேரத்தில், காவல்துறையினரை அடாவடியாக மிரட்டும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலானது. அதன் காரணமாக, நீலகிரியில் கோபாலகிருஷ்ணன் மக்கள் செல்வாக்கை இழந்தார். அதைத் தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமை கோபாலகிருஷ்ணனுக்கு எம்.பி சீட் வழங்காமல் கைவிரித்தது.
இந்த நிலையில், நேற்றைய தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அதிமுக முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மது போதையில் முத்தாலம்மன் பேட்டை பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுக்குள் நிர்வாணமாக நுழைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தலைக்கேறிய போதையில் தள்ளாடியபடி நடந்து வந்த கோபாலகிருஷ்ணன், திடீரென முத்தாலம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரின் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். அதைக் கண்ட வீட்டு உரிமையாளர் கோபி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பதிலுக்கு, கோபாலகிருஷ்ணனும் வாக்குவாதம் செய்ய, ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கோபி முன்னாள் எம்.பி-யை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். அத்துடன் நிர்வாண நிலையிலிருந்த கோபாலகிருஷ்ணனை தனது செல்போனில் வீடியோவும் எடுத்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, முன்னாள் எம்.பி-யின் ஆதரவாளர்களை அவரை மீட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து, கோபி குன்னூர் காவல்நிலையத்தில் தான் பதிவு செய்த வீடியோவுடன் கோபாலகிருஷ்ணன் மீது புகார் அளித்தார்.
அவரின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், வீட்டுக்குள் நிர்வாணமாக நுழைந்த முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மீதும், அவரைத் தாக்கிய கோபி மீதும் 294(B),323,506(i) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: நீலகிரி: 'மரக்கடத்தல் விவகாரம்; அதிமுக நிர்வாகி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு!'
from Latest News
No comments