``முல்லைப்பெரியாறு குறித்து பேச ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு உரிமை இல்லை!" - அணை ஆய்வுக்குப்பின் துரைமுருகன்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் சமூக ஊடங்களில் முல்லைப்பெரியாறு அணை குறித்து தவறான தகவல்கள் பரப்பி வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் கேரள மாநிலத்தில் பெய்த தொடர்மழையால் இடுக்கி, கோட்டயம் உள்ளிட்டப் பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, `முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அணை உடைந்தால் பல லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட வேண்டும்' என சினிமா நடிகர்கள் உள்ளிட்ட பலரும் போர்கொடி தூக்கினர். இதனால் ரூ.1500 கோடிக்கு புதிய அணை கட்டும் பணி டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: முல்லை பெரியாறு: கேரள அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும் இந்த வரலாறு தெரியுமா?
இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் மழையால் அணையின் நீர்மட்டம் 138 அடியைக் கடந்தது. உச்சநீதிமன்ற உத்தரவு படி அணையில் 142 அடி நீர்மட்டத்தை உயர்த்த பொதுப்பணித்துறை ஆயத்தமானது. இதையறிந்த கேரள அரசு அக்டோபர் 29-ம் தேதி அணையைத் திறக்கப்போவதாக 2 நாள்களுக்கு முன்பே அறிவித்தது. இதனிடையே அக்டோபர் 28-ம் தேதி தமிழகத்துக்கு பாதகமான ரூல் கர்வ் முறையை அமல்படுத்தக்கோரிய வழக்கும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரூல் கர்வ் விதியின்படி அணையில் 139.50 அடி வரை நீர் தேக்கிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்ற்ம உத்தரவிட்டது.
ஏற்கெனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும், ரூல் கர்வ் விதியை பின்பற்றக்கோரிய உத்தரவையும் கேரள அரசு பின்பற்றாமல், 137 அடி நீர் இருக்கும் போதே அணை திறக்கப்பட்டது.
அணை திறக்கப்படுவதற்கு 2 நாள்களுக்கு முன்பே முறையான அறிவிப்பை கேரள அரசு வெளியிட்டது. ஆனால் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கப்படுவது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிடவில்லை.
இதனால் தமிழக விவசாயிகள், `முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கும் உரிமையை தமிழக அரசு இழந்துவிட்டது' என அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்துதான் தமிழக நீர்வளத்துறை அமைச்சர், அணையில் தமிழக அரசுதான் தண்ணீர் திறந்தது என அறிக்கை வெளியிட்டார்.
இதற்கு தமிழக விவசாயிகள் சங்கங்கள் மட்டுமில்லாது பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் முல்லைப்பெரியாறு அணை விவகராத்தில் கேரள அரசின் முறையற்ற செயல்களுக்கு ஒத்துழைக்கும் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக உள்ளிட்ட கட்சிகளும், விவசாய சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
இத்தகையைச் சூழலில்தான் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர். அணையின் உறுதி தன்மை, தண்ணீர் திறக்கப்படும் அளவு, முறை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு அறிந்தனர்.
முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டு திரும்பிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேரள மாநிலம் தேக்கடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என்ற முறையில் முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்தேன். பதவியேற்றபோதே தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தேன். கொரோனா காலம் என்பதால் உடனடியாக ஆய்வுப் பணியைத் தொடங்கமுடியவில்லை. தற்போது ஆய்வுப்பணியைத் தொடங்கியுள்ளேன். தொடர்ச்சியாக ஆழியாறு உள்ளிட்ட அணைகளைப் பார்வையிட உள்ளேன்.
கடந்த 29-ம் தேதி தமிழக அரசு சார்பில்தான் முல்லைப்பெரியாறு அணை திறக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உச்சநீதிமன்றம் மத்திய நீர்வள ஆணையம் மூலம் ரூல் கர்வ் என்ற புதிய விதியைக் கொண்டுவந்துள்ளது. அந்த விதிப்படி அணைக்கு கடந்த 30 ஆண்டுகள் எவ்வளவு தண்ணீர் வந்தது. எவ்வளவு நீர்மட்டம் உயர்ந்தது என்பதை கணக்கெடுத்துள்ளனர். அந்தக் கணக்கெடுப்பின்படி, அணையின் நீர்மட்டம் எந்தெந்தக் காலகட்டத்தில் எவ்வளவு வைத்திருக்க வேண்டும் என அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது 139.50 அடி நீர்மட்டம் நிலை நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30-ம் தேதி 142 உயர்த்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்தான் அக்டோபர் 29-ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துள்ளோம். கடந்த 1979-ல் முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது எனவும், அணையைப் பலப்படுத்த வேண்டும் எனவும் கேரள அரசு கூறியது. அதையேற்று 3 நிலைகளில் அணையைப் பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அணையில் 152 அடி உயர்த்த அனுமதிகோரி நீதிமன்றத்துக்குச் சென்றோம். அப்போது பேபி அணையை பலப்படுத்திவிட்டு 152 நீர்மட்டம் நிலைநிறுத்தி கொள்ளலாம் எனக் கூறப்பட்டது.
இன்று பேபி அணையைப் பார்வையிட்டேன். அணைக்கு கீழே 3 மரங்கள் இருக்கின்றன. அந்த மரங்களை அகற்றினால்தான் பலப்படுத்தும் பணி நடத்த முடியும். கேரள அரசை கேட்டால், வனத்துறையிடம் கேட்க வேண்டும் என்கின்றனர். வனத்துறையை அணுகினால் மத்திய வனத்துறையை அணுகக் கூறுகின்றனர். நாங்கள் விரைவில் அந்த 3 மரங்களை அகற்றிவிட்டு, பேபி அணையை பலப்படுத்தி 152 அடி நீர்மட்டம் உயர்த்துவோம். அதன்பிறகு முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் எடுப்பது குறித்து இருமாநில அரசுகளும் பேசிதான் முடிவெடுக்க வேண்டும்.
Also Read: முல்லைப்பெரியாறு அணை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது?! - சர்ச்சையும் விளக்கமும்
முல்லைப்பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு ஒபிஎஸ்-க்கும் இபிஎஸ்-க்கும் தார்மீக உரிமை கிடையாது. இரண்டு பேரும் மாறிமாறி பொதுப்பணித்துறை அமைச்சர்களாக இருந்தனர். ஆனால் கடந்த பத்து ஆண்டுகாலத்தில் அந்தத் துறையின் அமைச்சர்களாக இருந்தவர்கள் ஒருமுறை கூட அணையை வந்து பார்வையிடவில்லை. நான் இந்த 80 வயதிலும் தட்டுதடுமாறியாவது ஆய்வை மேற்கொண்டு வருகிறேன். இபிஎஸ் ஆவது சேலத்துக்காரர், ஓபிஎஸ் தேனிக்காரர். இவராவது ஆய்வு செய்திருக்காலம். அப்போது கவனிக்காமல் இப்போது உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறுவதைப்பார்த்து நாடே சிரிக்கிறது. அருகே உள்ள மாநில அமைச்சர்கள் இணக்கமாக இருந்தால்தான் பொது பிரச்னைகளில் சுமூகமான தீர்வு காணலாம்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீது எனக்கு மரியாதை உண்டு. அவரை தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். அவர் நேர்மையான சுமூகமான அமைச்சர். அவர் காலத்தில்தான் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தீர்வு காணப்படும்" என்றார்.
from Latest News
No comments