மும்பை: `மனரீதியாக, உடல்ரீதியாக சித்ரவதை’ - கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவெடுத்த பெண் காவலர்
மும்பை வசாய் பகுதியைச் சேர்ந்தவர் தீபாலி கதம் (26). இவர் வசாய் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். தீபாலியும் அருகிலுள்ள நாலாசோபாரா காவல்நிலையத்தில் பணியாற்றிவந்த காவலர் வால்மீகி அஹிரே என்பவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கருத்து வேறுபாட்டின் காரணமாக, அஹிரோ தீபாலியை கடந்த சில மாதங்களாக அடித்துச் சித்ரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட தீபாலி உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அலுவல் விடுமுறையில் புனேவில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவரின் பெற்றோர், மயூர் காம்ப்ளே என்பவருக்கு தீபாலியை நிச்சயம் செய்திருக்கின்றனர். தொடர்ந்து, இந்த மாதம் 16-ம் தேதி திருமணம் முடிக்கவும் அவர்கள் திட்டமிட்டிருந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காவலர் அஹிரே மணமகன் மயூரை சந்தித்து, ``தீபாலியை திருமணம் செய்து கொள்ளவேண்டாம். என் பேச்சை மீறி திருமணம் செய்தால், திருமணமான சில நாள்களில் தீபாலி என்னுடன் வந்துவிடுவார்" என்று மிரட்டியிருக்கிறார்.
அதனால் மயூர், தீபாலியுடன் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியிருக்கிறார். திருமணம் நிறுத்தப்பட்டதால் இளம்பெண் தீபாலி, கடந்த சில தினங்களாக மன விரக்தியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு தன் சகோதரர் ரோஹித்துக்கு கடிதம் எழுதி, வாட்ஸ்அப்பில் அனுப்பி விட்டு, தீபாலி துப்பட்டாவைப் பயன்படுத்தித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை வெகுநேரமாகியும் தீபாலி தன் அறையை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த அவரின் குடும்பத்தினர் அறைக் கதவைத் தட்டியிருக்கின்றனர். ஆனால், அவர் வெளியே வராததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்திருக்கின்றனர்.
அப்போது, தீபாலி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போனவர்கள், உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் தீபாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தீபாலியின் சகோதரர் ரோஹித், தீபாலி தனக்கு அனுப்பிய வீடியோவை காட்டியிருக்கிறார். மேலும், போலீஸாரிடம் ரோஹித் இது தொடர்பாகக் கூறுகையில்,``நான் என் சகோதரி தீபாலியை தொந்தரவு செய்யவேண்டாம் என்று ஏற்கெனவே பலமுறை, அஹிரேவை நேரில் சந்தித்து கூறியிருக்கிறேன். அப்போது, தீபாலியை யாருக்காவது திருமணம் செய்து வைத்தால் உங்கள் அனைவரையும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். மேலும், முன்னதாக இரண்டு முறை திருமண ஏற்பாடு செய்த போதும், இதேபோல, திருமணத்தைத் தடுத்து நிறுத்தி, தீபாலியை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்" என்று போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் தீபாலி தன் சகோதரருக்கு எழுதிய கடிதத்தில், ``அஹிரே என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்தார். என் தந்தை கூட என்னை அடித்தது இல்லை. ஆனால், அஹிரே என்னை அடிக்கடி அடித்து சித்ரவதை செய்தார். என்னால் என் பெற்றோரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறேன். அஹிரேவை விட்டு விடாதீர்கள். அவருக்கு தக்க பாடம் புகட்டவேண்டும். இனி மேல் வேறு எந்த பெண்ணையும் இது போல் அஹிரே சித்ரவதை செய்யக்கூடாது" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தீபாலியின் தற்கொலையைத் தொடர்ந்து, அஹிரே தலைமறைவாகிவிட்டார். போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
from Latest News
No comments