Breaking News

அமித் ஷா-வின் திருப்பதி கவுன்சில் திட்டம்... கலந்துகொள்வாரா முதல்வர் ஸ்டாலின்?!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட கலெக்டர் ஹரிநாராயணன், மாவட்ட அளவிலான துறை தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஹரிநாராயணன், சித்தூர் கலெக்டர்

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கலெக்டர் ஹரிநாராயணன், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் திருப்பதியில் உள்ள தாஜ் ஓட்டலில், வருகிற 14-ம் தேதி, தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களும், அந்தமான், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் கவர்னர்களும் கலந்து கொள்கிறார்கள்” என்று தெரிவித்தார். மேலும், 'மிக முக்கிய பிரமுகர்கள் தங்கும் இடங்களில் உதவி மையங்களை அமைக்க வேண்டும் எனவும் மருத்துவ மையங்கள், பாதுகாப்பு, போக்குவரத்து, உணவு போன்ற ஏற்பாடுகளையும் தவறாமல் செய்ய வேண்டும்’ என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அமித் ஷா தென் மாநில முதல்வர்களைச் சந்திப்பதன் நோக்கமென்ன? என்பது குறித்து பா.ஜ.க வட்டாரத்தில் விசாரித்தோம். ``மத்திய அரசின் உள்துறை அமைச்சராக, மாநில முதல்வர்களை அமித் ஷா சந்திப்பது என்பது நிர்வாக ரீதியிலான ஆலோசனைதான். இருந்தபோதும், இதில் அரசியல் காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

தென்னிந்திய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்

தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கர்நாடகம், புதுச்சேரி என இரண்டில்தான் பா.ஜ.க அல்லது அதன் கூட்டணி கட்சி ஆட்சி அமைந்துள்ளது. தெலங்கானாவும், ஆந்திராவும் ஓரளவு மத்திய அரசுடன் அனுசரனையாக இருக்கிறது. கேரளம், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களும் மத்திய பா.ஜ.க அரசுக்கு எல்லா விதங்களிலும் எதிராகத்தான் இருக்கிறது.

Also Read: களத்தில் அமித் ஷா; காஷ்மீரில் பதற்றம் தணியுமா?!

திருப்பதி ஏழுமலையான் கோயில்

ஆளுநரைக் கொண்டு மாநிலங்களின் விவகாரங்களை மத்திய அரசு தெரிந்துகொண்டபோதும், மத்திய அரசின் திட்டங்களை தென் மாநில அரசுகள் புறக்கணிப்பதாகவே மத்திய அரசு எண்ணுகிறது. மேலும், ஜி.எஸ்.டி வரி ரிட்டர்ன் விவகாரத்தில் தென் மாநிலங்களை மத்திய அரசு ஓரவஞ்சனை செய்வதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. இதுபற்றி எல்லாம் நேரில் விவாதிக்க விரும்பும் அமித் ஷா, அதற்காகத்தான் கவுன்சில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இதுமட்டுமின்றி, நிறைவேற்றப்படாத பல மசோதாக்கள் காத்திருப்பில் இருக்கின்றன. மக்களவை, மாநிலங்களவையில் தென்னிந்தியாவின் பங்கு அதிகம் இருப்பதால், இங்கு ஆளும் கட்சித் தலைவர்களாகவும், முதல்வர்களாகவும் இருப்பவர்களிடம் அதுபற்றி விவாதித்து முடிவு எடுக்க வேண்டிய தேவையும் அமித் ஷாவுக்கு இருக்கிறது.

பாஜக ஆளும் கர்நாடகத்திலோ, புதுச்சேரியிலோ கவுன்சில் கூட்டத்தைக் கூட்டாமல் திருப்பதியில் கூட்டுவதற்கும் காரணம் இருக்கிறது. அமித் ஷா திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று வழிபட இருக்கிறார். அதோடு அங்கேயே கவுன்சில் கூட்டத்தையும் கூட்டுகிறார். ஒருவேளை கர்நாடகம், புதுச்சேரியில் கூட்டம் நடக்குமேயானால், ‘மத்திய அரசு கவுன்சில் கூட்டத்தைக் கூட தன் கட்சி ஆளும் மாநிலத்தில்தான் நடத்துகிறது’ என்ற அவப்பெயர் எழும்” என்றனர்.

பினராயி விஜயன், ஸ்டாலின்

கவுன்சில் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோரும் கலந்துக்கொள்வார்களா என்பதுதான் கேள்வி. தி.மு.க தரப்பில் பேசியபோது, “அரசு தொடர்பான கவுன்சில் கூட்டம் என்பதால் கலந்துகொள்ளத்தான் செய்வார் என்று நினைக்கிறோம். அந்நாளில் ஏதேனும் பணிகள் இருந்தால், அமைச்சர்களை அனுப்பி வைக்கவும் வாய்ப்புள்ளது. அமைச்சர்களை அனுப்பினால் அமித் ஷாவைச் சந்திக்க அச்சமா? என்று பா.ஜ.க-வினர் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவார்கள். அதற்கெல்லாம் இடம் கொடுக்காத வகையில், கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழகத்தின் தேவைகளை ஆணித்தனமாக சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்றனர்.



from Latest News

No comments