30 வருடங்களுக்கு பிறகு தஞ்சாவூரில் தீபாவளி... உற்சாக சசிகலா.. நெகிழ்ந்த உறவுகள்!
தஞ்சாவூரில் தங்கியிருந்தபடி ஆதரவாளர்களை சந்திப்பதுடன் அரசியல் குறித்த நகர்வுகளை அரங்கேற்றி வரும் பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே சசிகலா தனக்கு நெருக்கமான உறவினர்களுடன் தீபாவளி கொண்டாடியிருக்கிறார். `30 வருடங்களுக்கு பிறகு, தஞ்சாவூரில் இருந்து எங்களுடன் தீபாவளி கொண்டாடினார்’ என உறவினர்கள் நெகிழ்ந்து பேசுகிறார்களாம்.
சசிகலாவை அதிமுகவில் சேர்த்து கொள்வது குறித்து கட்சியின் நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என ஓ.பன்னீர் செல்வம் பற்ற வைத்த பட்டாசு தற்போது வரை வெடித்து கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சசிகலா சுற்றுப் பயணத்தை தொடங்கினார். கடந்த மாதம் 26-ம் தேதி தஞ்சாவூர் வந்தவர், 27ம் தேதி நடைபெற்ற தினகரன் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். பின்னர் 29-ம் தேதி கமுதி பசும்பொன் சென்று தேவர் சமாதியில் மரியாதை செலுத்திய பிறகு தஞ்சாவூர் வந்தார். இதையடுத்து 1, 2ம் தேதிகளில் தஞ்சாவூரில் உள்ள இல்லத்தில் இருந்தபடி ஆதரவாளர்களைச் சந்தித்தார்.
Also Read: சசிகலா: 3 நாள்கள் ஆதரவாளர்களுடன் சந்திப்பு; முக்கியஸ்தரின் மறைமுக ஆதரவு?! -பரபரக்கும் அதிமுக
`அதிமுக பொதுச் செயலாளர் நான் தான்’ என தன்னை சந்திக்கும் ஆதரவாளர்களிடம் கூறி அவர்களை சசிகலா உற்சாகப்படுத்தினாராம். அத்துடன், `விரைவில் தமிழகம் முழுவதும் கிராமம் கிராமாக சுற்றுப்பயணத்தை தொடர இருக்கிறேன். நீங்க நினைப்பது சீக்கிரமே நடக்கும். அதிமுக என் தலைமையின் கீழ் செயல்படும். அன்றைக்குத் தான் நமக்கெல்லாம் நிஜமான தீபாவளி’ என சசிகலா கூறியதாக அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
குடும்பம் குடும்பமாக ஆண்கள் பெண்கள் என ஒரு கூட்டம் சசிகலாவை சந்திக்க வருவதால், அவருக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. முதலில் மூன்று நாள்கள் மட்டுமே ஆதரவாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ஒரு நாள், அதாவது 6-ம் தேதியும் சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: ``அதிமுக என்ற யானை மீது அமர்ந்திருந்த கொசு சசிகலா!" - போட்டுத்தாக்கும் ஜெயக்குமார்
அரசியல் பரபரப்புகள் மிகுந்த இந்த சூழ்நிலையில் எந்த விதமான டென்ஷனும் இல்லாமல் தனது முக்கிய உறவினர்களுடன் பட்டாசு வெடித்து சசிகலா தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளாராம். சுமார் 30 வருடங்களுக்கு பிறகு தீபாவளி நாளில் சசிகலா தஞ்சாவூரில் இருப்பதுடன் உறவினர்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடுவது உறவுகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சசிகலா உறவுகள் தரப்பில் பேசினோம், `சசிகலா தற்போது தங்கியிருக்கும் வீட்டை அவரின் கணவர் மறைந்த ம.நடராசன் சசிகலாவுக்காக கட்டினார் என அவருக்கு நெருக்கமான பலர் கூற கேட்டிருக்கோம். ஆனால் அரசியல் சூழல்... மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டனிலேயே இருந்ததால் நடராசன் கட்டிய வீட்டில் அவர் ஒரு நாள் கூட இருந்ததில்லை .அந்த வருத்தம் கணவராக நடராசனுக்கு எப்போதும் இருந்து வந்தது.
Also Read: பற்றவைத்த சசிகலா... அ.தி.மு.க தீபாவளி! - புகையும் பன்னீர்... ‘புஸ்ஸ்...’ எடப்பாடி
தனது அண்ணனும், டாக்டர் வெங்கடேஷின் அப்பாவுமான சுந்தரவதனம் இறந்தையொட்டி மேலவஸ்தாசாவடியில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் நேற்று தீபாவளி படையல் போடப்பட்டது. அதில் கலந்து கொண்டவர், பின்னர் தனது அண்ணன் மகன் மறைந்த மகாதேவன் வீட்டிற்குச் சென்றார். மகாதேவன் உயிரிழந்து நான்கு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் அவர் வீட்டுக்குள் சென்ற சசிகலா சில நிமிடங்கள் யாரிடமும் பேசாமல் மெளனமாக இருந்துள்ளார்.
``மகாதேவன் மேல அளவு கடந்த பாசம் வச்சிருந்தேன். அவன் இவ்வளவு சீக்கிரமே நம்மள விட்டுடு போய்டுவானு நெனைக்கவே இல்ல. அவன் நெனப்பு எனக்கு எப்போதுமே இருக்கும்’ என மகாதேவன் மனைவி மற்றும் மகள்களிடம் கண்கள் கசிந்துள்ளார்.
அப்போது மகாதேவன் மகளிடம், `உனக்கு என்ன தேவைன்னாலும் எங்கிட்ட கேக்கனும்’ என கூறியவர் மகாதேவன் மனைவியிடம், `மகள் கீர்த்திகாவுக்கு வரன் பாருங்க நல்ல இடமா அமைஞ்ச உடனே நானே முன்னின்று திருமணத்தை நடத்தி வைக்கிறேன்’ என கூற, `நாலு வருஷமா அப்பா இல்லாமல் தவிச்சோம். இப்ப நீங்க அந்த குறையை இல்லாம செஞ்சீட்டிங்கனு’ மகாதேவன் மகள்கள் கலங்கினர். சசிகலா அங்கிருந்த போது மகாதேவனின் ஆதரவாளரும், குடும்பத்தில் ஒருவருமான சிவக்குமார் அனைத்தையும் ஓடியாடி கவனித்தார்.
இன்று நடராசனின் தம்பி ராமச்சந்திரன் மகன் டாக்டர் ராஜுவின் குழந்தை மற்றும் நடராசன் சகோதரர்களின் பேரப் பிள்ளைகளுடன் தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடினர். இப்ப நடராசன் இருந்தா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார் என அவரின் உறவினர்கள் உருகினர்.
கிட்டதட்ட 30 வருடங்களுக்கு பிறகு, சசிகலா தஞ்சாவூரில் இருப்பதுடன் உறவினர்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடியதால் பலரும் நெகிழ்ந்துள்ளனர்’ என தெரிவித்தனர். மேலும் வரும் 7ம் தேதி சென்னை புறப்படுகிறார் சசிகலா. அதன் பிறகு மாநிலம் முழுவதும் கிராமம் தோறும் சுற்றுப் பயணம் செல்ல இருக்கிறார் என கூறப்படுகிறது.
from Latest News
No comments