Breaking News

ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட பட்டாசு வெடித்து விபத்து?! -தந்தை, மகன் உடல் சிதறி உயிரிழந்த சோகம்

தீபாவளி பண்டிகை இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை செய்து வரும் நபர்கள் பலரும், தனது சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி என்றாலே பட்டாசுக்கு தனியிடம் உண்டு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல வகையான இந்த பட்டாசு பொருட்களை வெடித்து மகிழ்வர். ஆனால், பட்டாசு மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாகனம்

புதுவை மாநிலம், அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கலைநேசன். இவர், கோட்டக்குப்பம் அடுத்த கூனிமேடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவர் தனது இரு சக்கர வாகனத்தின் (ஸ்கூட்டர்) முன்புறமாக மூட்டைகளில் பட்டாசுகளை எடுத்துக்கொண்டு தனது 7 வயது மகனை உடன் அழைத்துக்கொண்டு புதுவை நோக்கி சென்றுள்ளார். தமிழக எல்லைப் பகுதியான சின்ன கோட்டக்குப்பம், கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது திடீரென அந்த நாட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், கலைநேசன் மற்றும் அவரின் 7 வயது மகனும் பரிதாபமாக உடல் சிதறி இறந்துள்ளனர். அதேபோல, எதிரில் வாகனத்தில் வந்த இருவருக்கும், ஓரமாக நடந்து சென்ற ஒருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

Also Read: கள்ளக்குறிச்சி: `பட்டாசுக் கடையில் தீ விபத்து; 6 பேர் உயிரிழப்பு; முதல்வர் இரங்கல்!'

இரு மாநில காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சிதறிக் கிடந்த உடல்களை ஒருங்கிணைத்து மீட்ட கோட்டக்குப்பம் காவல்துறையினர், உடலை பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு வெடித்ததில் லேசான காயமடைந்த விஜி, அமீது ஆகியோர் ஜிப்பர் மருத்துவமனையிலும், கணேசன் என்ற நபர் கதிர்காமம் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனராம். விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.

பட்டாசு விபத்தில் உயிரிழந்த புதுவை நபர்

இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா-விடம் பேசினோம். "முதற்கட்ட விசாரணையில் வெடித்தது பட்டாசு என்பது தெரியவந்துள்ளது. தந்தையும், மகனும் இருசக்கர வாகனத்தில் நாட்டு பட்டாசை எடுத்துக்கொண்டு வருகின்றனர். அப்போது திடீரென பட்டாசு வெடித்ததில் இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.



from Latest News

No comments