இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பின்னடைவு! - மீண்டும் ஓங்குகிறதா காங்கிரஸ் கை?!
அசாம், மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், இமாச்சல் பிரதேசம், மேகாலயா, பீகார், கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் 3 மக்களவைத் தொகுதிகள், 29 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 30-ம் தேதி நடந்தது. இதில் பா.ஜ.க ஆளும் இமாச்சல் பிரதேசத்தில் அனைத்துத் தொகுதியிலும் காங்கிரஸே வெற்றி பெற்றது. கர்நாடகாவில் இரண்டு தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஒன்றில் மட்டுமே பா.ஜ.க வென்றது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் உள்ள அங்கால் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது காங்கிரஸ். மேற்கு வங்கத்தில் நான்கு தொகுதிகளில் தலா 1,64,089; 64,675; 93,832; 1,43,051 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸிடம் பா.ஜ.க தோல்வியடைந்திருக்கிறது. ராஜஸ்தானில் இரண்டு தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் பத்வேல் தொகுதியிலும் தத்ரா நாஹர்ஹவேலித் தொகுதியிலும் சிவசேனா வெற்றி பெற்றிருக்கிறது. இடைத்தேர்தல் நடந்த மக்களவை தொகுதிகளில் 3-ல் ஒரு தொகுதியை மட்டுமே பா.ஜ.க கைப்பற்றியிருக்கிறது. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 16 இடங்களில் பா.ஜ.க நேரடியாக எதிர்க்கட்சிகளிடம் தோல்வியடைந்திருக்கிறது.
இடைத்தேர்தலில் ஆளும் அரசே பெரும்பாலான இடங்களில் வெற்றியைப் பதிவு செய்யும் என்பது அரசியல் விமர்சகர்களின் தேர்தல் கணக்கு. ஆனால், இந்த இடைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க மிகப்பெரிய தோல்வியைப் பதிவுசெய்து பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. அதற்கான காரணம் என்ன? காங்கிரஸ் கட்சி மீண்டும் வலுப்பெறுகிறதா என்பது குறித்து ஓர் அலசல்...
Also Read: காங்கிரஸ் இல்லாமல் மம்தா தலைமையில் மூன்றாவது அணி; பா.ஜ.க-வுக்கு சாதகமாகுமா?
பின்னடைவைச் சந்தித்த பா.ஜ.க...
“வேளாண் சட்டங்கள், பெட்ரோல் - டீசல்- கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, அரசின் சொத்துகளைத் தனியார் மயமாக்கியது, விவசாயிகள் போராட்டத்தில் நடக்கும் வன்முறைகள் எனப் பா.ஜ.க-வின் தோல்விக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இந்தத் தோல்வி பா.ஜ.க தலைவர்களிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா-வின் சொந்த மாநிலமான இமாச்சல் பிரதேசத்தில் பா.ஜ.க மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதற்கு அந்த மாநிலத்தில் கட்சியினர் சிறப்பாகச் செயல்படவில்லை எனவும் அதை நட்டா கவனிக்கத் தவறிவிட்டார் எனவும் கட்சிக்குள்ளேயே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இன்னும் ஓராண்டுக்குள் இமாச்சலில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பா.ஜ.க இதை ஓர் எச்சரிக்கை மணியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ், ஓரிடத்தைக் கைப்பற்றியிருக்கிறது. இது 2023 சட்டசபைத் தேர்தல் சிவராஜ் சிங் சௌஹானுக்கும் கமல்நாத்துக்கும் இடையிலான மற்றொரு பெரும் போட்டியாக மாற வாய்ப்பு உள்ளதையே காட்டுகிறது. அசாமில் உள்ள ஐந்து சட்டசபைத் தொகுதிகளையும் பா.ஜ.க கூட்டணி கைப்பற்றிய நிலையில், ராஜஸ்தானின் இரண்டு தொகுதிகளிலும் பா.ஜ.க-வை மூன்றாவது இடத்துக்குத் தள்ளியிருக்கிறது காங்கிரஸ். ராஜஸ்தானில் பா.ஜ.க பிளவுபட்டுள்ள நிலையில் அடுத்து வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு சவாலை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க, நான்கு இடைத்தேர்தல் இடங்களில் மூன்றில் டெபாசிட் இழந்திருக்கிறது. இந்தத் தோல்வியின் மூலம் மேற்கு வங்கத்தில் 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அடைந்த வாக்குவிகித வளர்ச்சி தடைப்பட்டுள்ளதோடு, சரியவும் தொடங்கியிருக்கிறது. சில இடங்களில் காங்கிரஸும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது என்றாலும் ஆளும் கட்சி என்பதாலேயே பா.ஜ.க தோல்வி கவனத்துக்குள்ளாகிறது” என இடைத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்கு எந்தளவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை விவரிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இடைத்தேர்தல் தோல்வி குறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம், “இடைத்தேர்தல் வெற்றி, தோல்வியை ஒப்பீடு செய்து ஒரு கட்சியின் செல்வாக்கு குறைந்துவிட்டது என்றோ, கூடிவிட்டது என்றோ சொல்ல முடியாது. ஆளும் அரசு இடைத்தேர்தலில் தோல்வி அடைவதைப் பல முறை, பல தேர்தல்களில் நாம் பார்த்திருக்கிறோம். இடைத்தேர்தல் வெற்றி, தோல்வி என்பது அந்தந்த மாநிலத்தின், தொகுதியின் அப்போதைய சூழலை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. சில தொகுதிகளுக்கு நடந்த தேர்தலை வைத்துக்கொண்டு பா.ஜ.க-வுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா எனப் பேசுவதே தவறு.
பல்வேறு சமயங்களில் நடந்த பல்வேறு தேர்தல்களின் முடிவுகளை வைத்து பா.ஜ.க சரிவைச் சந்தித்து வருகிறது என்று ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் பேசியிருக்கின்றன. ஆனால், பா.ஜ.க அவற்றையெல்லாம் எதிர்கொண்டு மிகப்பெரிய சக்தியாக ஒவ்வொரு முறையும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது” என விளக்கமளித்தார்.
from Latest News
No comments