Breaking News

Doctor Vikatan: ஸ்வீட்ஸ் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவிட்டால் வெயிட் கூடுவதைத் தவிர்க்க முடியுமா?

ஒவ்வொரு வருடமும் தீபாவளியின்போது சந்திக்கிற பிரச்னை இது. வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் ஸ்வீட்ஸ் சாப்பிடாமல் கட்டுப்பாடாக இருந்தாலும், தீபாவளி நேரத்தில் வீடு தேடி வரும் ஸ்வீட்ஸை தவிர்க்க முடியாமல் கட்டுப்பாட்டை இழக்கிறேன். அதன் விளைவாக ஏறும் சில கிலோ எடையைக் குறைக்க சில மாதங்கள் போராட வேண்டியிருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு ஏதேனும் வழி உண்டா? ஸ்வீட்ஸ் சாப்பிட்டதும் வெந்நீர் குடிப்பது, அடுத்த வேளை சாப்பாட்டைத் தவிர்ப்பது போன்றவை எடை அதிகரிக்காமலிருக்க உதவுமா?

- அக்‌ஷய் (விகடன் இணையத்திலிருந்து)

கற்பகம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்.

``பொதுவாக ஸ்வீட்ஸ் சாப்பிட்ட மறுநாள் உங்கள் எடையை செக் செய்தீர்கள் என்றால் நிச்சயம் அது கூடியிருப்பதைப் பார்க்கலாம். அதற்கு காரணம் அந்த இனிப்புகளிலுள்ள கலோரிகளின் அளவு. இனிப்புகள் என்றில்லை, அதிக கலோரிகள் கொண்ட உணவுகளைச் சாப்பிடும்போது சில விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு இரவு உணவுக்கு கலோரிகள் அதிகமான உணவு அல்லது அதிக இனிப்புகள் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.

முன்கூட்டியே அப்படி சாப்பிடப் போகிறீர்கள் என்று தெரியும் பட்சத்தில் அன்றைய தினம் காலை உணவு மட்டும் மதிய உணவை கொஞ்சம் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நிறைய காய்கறிகள் உள்ளதுபோன்ற பேலன்ஸ்டு உணவாக இருக்க வேண்டியது அவசியம். சாப்பிடும் அளவும் முக்கியம். இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்க்கவே முடியவில்லை என்பவர்கள், அதை அளவுக்கதிமாகச் சாப்பிடாமல், அளவோடு சாப்பிடும்போது அடுத்தநாள் எடை கூடாது.

அல்வா

Also Read: Doctor Vikatan: வெயிட்டும் குறைய வேண்டும், மஸிலும் வேண்டும்; இதற்கு நான் என்ன வேண்டும்?

முதல்நாள் சாப்பிட்ட அதிகப்படியான இனிப்பை ஈடுகட்ட அடுத்தநாள் செய்யக்கூடிய மேஜிக்கென்று எதுவும் இல்லை. திரவ உணவுகள் நிறைய எடுத்துக்கொள்ளலாம். வெந்நீர் குடிப்பதெல்லாம் எந்தவகையிலும் எடையைக் குறைக்க உதவாது. செரிமான பிரச்னை இருப்பவர்கள் வெந்நீரோ, சீரகம் அல்லது ஓமம் சேர்த்த தண்ணீரோ குடிக்கலாம். வயிற்று உப்புசம், நிறைய சாப்பிட்டதால் ஏற்படுகிற ஒருவித கனத்த உணர்வு போன்றவற்றிலிருந்து விடுபட அது உதவுமே தவிர, எடைக்குறைப்புக்கு உதவாது. தினமும் வெயிட் பார்ப்பதையும் தவிருங்கள். அது தேவையற்றது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


from Latest News

No comments