Doctor Vikatan: மாதத்தில் பலநாள்களில் வெள்ளை படுகிறது; பேன்ட்டி லைனர் உபயோகிப்பது தீர்வாகுமா?
என் வயது 32. மாதத்தின் பல நாள்கள் வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கிறது. வேலைக்குச் செல்வதால் நான் பேன்ட்டி லைனர் உபயோகிக்க வேண்டியிருக்கிறது. பேன்ட்டி லைனர் உபயோகிப்பது சரியானதா? வெள்ளை படுகிற நாள்களில் அந்தரங்க உறுப்பில் ஒருவித வாடை வருகிறது. அந்தரங்க உறுப்பை வாடையின்றி வைத்துக்கொள்ள வெஜைனல் வாஷ் உபயோகிக்கலாமா?
- ஷைலஜா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
``உங்களுக்கு மாதத்தின் பல நாள்கள் வெள்ளைப்படுதல் பிரச்னை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அது முதலில் கவனிக்கப்பட வேண்டும். வெள்ளைப்படுதலின் தன்மை, அதன் நிறம், வாடை, அடர்த்தி போன்றவை நிச்சயம் கவனிக்கப்பட்டு முறையான மருத்துவ சிகிச்சை எடுக்கப்பட வேண்டும்.
பேன்ட்டி லைனர் உபயோகிப்பது என்பது தற்காலிகமான தீர்வு. வேலைக்குச் செல்லும் நீங்கள் அசௌகர்யமாக உணராமலிருக்க நீங்கள் தேர்ந்தெடுத்த தீர்வு. மற்றபடி நீங்கள் கவனிக்க வேண்டியது பேன்ட்டி லைனர் உபயோகிக்க காரணமான வெள்ளைப் போக்கைதான். ஏன் வெள்ளை படுகிறது என தெரிந்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள். உங்கள் பிரச்னையை நீங்கள் அலட்சியம் செய்கிறீர்கள். அது தவறு.
Also Read: Doctor Vikatan: பீரியட்ஸ் நாள்களில் ஏற்படும் சருமப் பிரச்னை; என்ன தீர்வு?
சிலருக்கு பீரியட்ஸின். 8-9வது நாளில்கூட லேசான ஸ்பாட்டிங் இருக்கலாம். அந்த அசௌகர்யத்திலிருந்து தப்பிக்கவே அவர்கள் பேன்ட்டி லைனர் உபயோகிப்பார்கள். உங்கள் பிரச்னை அப்படியானதல்ல என்பதால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
வெஜைனல் வாஷ் உபயோகிக்கலாமா என்ற கேள்வி நிறைய பெண்களுக்கு இருக்கிறது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அது தேவையே இல்லை. அதேபோல அதிக வாசனை சேர்க்கப்பட்ட சோப், பபுள் பாத் போன்றவையும் உங்களுக்குத் தேவையே இல்லை. சுத்தமான நீரால் வெஜைனா பகுதியைக் கழுவினாலே போதுமானது. வெஜைனா பகுதியில் உள்ள பி.ஹெச் அளவை சரியாக வைத்துக்கொள்ள லேக்டோ பேசிலை எனும் நல்ல பாக்டீரியா நம் உடலில் இருக்கும். வாசனையான சோப், வெஜைனல் வாஷ் போன்றவற்றை அடிக்கடி உபயோகிப்பதன் விளைவாக இந்த நல்ல பாக்டீரியா குறைய ஆரம்பிக்கும். பெண்களுக்குப் பாதுகாப்பைத் தரக்கூடிய இந்த பாக்டீரியா கிருமிகள் குறைவதன் விளைவாக அவர்கள் எளிதில் இன்ஃபெக்ஷனுக்கு இலக்காவார்கள்.
Also Read: White Discharge: எது Normal? எது Abnormal? | Vaginal Discharge Types & Reasons Explained | Say Swag
சாதாரண வெள்ளைப்படுதலில் எந்த வாடையும் இருக்காது. ஒருவேளை வாடையுடன் வெள்ளைப்போக்கு இருந்தால் உங்களுக்கு கர்ப்பப்பை, வெஜைனா அல்லது கர்ப்பப்பைக் குழாய்களில் இன்ஃபெக்ஷன் இருக்க வாய்ப்புண்டு. அந்தத் தொற்றை சரியாக்காமல், வாடையைக் கட்டுப்படுத்த வாஷ், சோப் போன்றவற்றை உபயோகிப்பது சரியானதல்ல. தற்காலிகமாக அந்த நேரத்துக்கு வேண்டுமானால் வாடை கட்டுப்படுமே தவிர, வாடைக்குக் காரணமான தொற்று சரியாகாது."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News
No comments