`மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்; 27-ம் தேதி முதல் கலந்தாய்வு!' - மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநகரத்தில், மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று மாலை வெளியிட்டார். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்ட இந்த தரவரிசைப் பட்டியலில் நாமக்கல்லைச் சேர்ந்த கீதாஞ்சலி என்ற மாணவி 710 மதிப்பெண்களுடன் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றார். மேலும் 7.5 சதவிகித அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டில் 514 மதிப்பெண்களுடன் சிவா என்ற மாணவர் முதலிடம் பெற்றார். அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4349 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2650 எம்பிபிஎஸ் இடங்கள் என மொத்தம் 6999 எம்பிபிஎஸ் இடங்களும், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1930 பிடிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனையடுத்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``7.5 சதவிகித மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டில் 436 இடங்கள் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கும் , 97 இடங்கள் பிடிஎஸ் படிப்புகளுக்கும் என மொத்தம் 533 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக" கூறினார். சிறப்பு மற்றும் 7.5 சதவிகித ஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கு வரும் 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுபிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இணையவழி மூலம் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் www.tnmedicalselection.org மற்றும் www.tnhealthgov.in ஆகிய இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: மருத்துவக் கலந்தாய்வு பிரச்னை: டெல்லியில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்திற்கு அரசின் பதில் என்ன?
from Latest News
No comments