Breaking News

மகாராஷ்டிரா: அரசு பஸ்களுக்கு எரிபொருள் வாங்க பணமில்லை... வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஊழியர்கள், பயணிகள்!

மகாராஷ்டிராவின் மும்பை மெட்ரோபாலிடன் பகுதியிலிருந்து ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் அதிக அளவில் அரசு பஸ்களில் முன்பதிவு செய்திருந்தனர். இதற்காக பயணிகள் தானே போன்ற பகுதியிலுள்ள மாநில அரசு போக்குவரத்துக்கழக பஸ் டெப்போவுக்குச் சென்றனர். ஆனால் பெரும்பாலான பஸ்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஊழியர்கள் பணிக்குச் சென்றபோது `விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று டெப்போ மேலாளர்கள் தெரிவித்தனர். `வேலைக்கு வந்தவர்ளை ஏன் விடுமுறை எடுக்க சொல்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு `பஸ்களுக்கு எரிபொருள் கொள்முதல் செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே, விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள். நாங்களே போன் பண்ணி வரும்படி சொன்னால் வந்தால் போதும்’ என்று கூறினர். இது ஊழியர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்டாய விடுமுறை கொடுக்கப்படுவதால் என்னவென்று அவர்கள் விசாரணையில் இறங்கியபோது அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.

டெப்போவில் பஸ்கள்

டெப்போவில் பஸ்களுக்கு தேவைப்படும் எரிபொருள் வாங்கவே பணம் இல்லாமல் இருந்தது. இதனால் பஸ்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியாமல் அதிகமான பஸ்கள் டெப்போவில் முடங்கிக்கிடக்கின்றன. பஸ்ஸில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் டிக்கெட்டை ரத்துசெய்ய வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதிகமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் பஸ்களில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் பஸ்களும் ரத்துசெய்யப்பட்டதால் எப்படிச் சொந்த ஊருக்கு செல்வது என்று தெரியாமல் திண்டாடிவருகின்றனர்.

கடந்த 15 நாள்களாக இது போன்ற ஒரு நிலைதான் இருந்துவருகிறது. விடுமுறை நேரத்தில் இது போன்று எரிபொருள் வாங்கவே பணம் இல்லாமல் இருப்பது அரசு நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பஸ் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ரவீந்திர கெய்க்வாட், சுரேஷ் ஜாதவ் ஆகியோர் இது தொடர்பாக டெப்போ நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதி, பஸ்கள் அதிக அளவில் டெப்போவில் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி கேட்டுள்ளனர். தானேயில் மட்டும் அரசு பஸ்கள் ரத்துசெய்யப்படுவதால் 14 லட்சம் ரூபாய் தினமும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் வாங்க பணமில்லாதது குறித்து ஆரம்பத்தில் அதிகாரிகள் எதுவும் தெரிவிக்க மறுத்தனர்.

டெப்போவில் பஸ்கள்

ஆனால், அனைத்து ஊழியர்களும் நிர்பந்தம் செய்ததால், உண்மையைச் சொல்லவேண்டிய நிலை அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. மும்பையில் அதிகமானோர் கொங்கன் பகுதியைச் சேர்ந்தவர்கள். கொங்கன் பகுதி முழுக்க மலைப்பகுதிகள். அங்கு பஸ்கள்தான் செல்ல முடியும். எனவே, ஒவ்வொரு விழாவுக்கும் மும்பையிலிருந்து ஆயிரக்கணக்கான சிறப்பு பஸ்கள் கொங்கன் பகுதிக்கு இயக்கப்படுவது வழக்கம். இப்போது அதிலும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. எனவே, போக்குவரத்துத்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



from Latest News

No comments