Breaking News

பீஜிங் ஒலிம்பிக்ஸ்: சமையல் டு டெலிவரி வரை ரோபோக்கள்... சீனாவில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

சீனாவின் பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 4 முதல் தொடங்க இருக்கின்றன. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கும் இடம் தளர்வற்ற வளையமாக அறிவிக்கப்பட்டு உள்ளிருந்து வெளியேயும் வெளியே இருந்து உள்ளேயும் செல்வதற்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. காவலர்கள் அதற்கான பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

விளையாட்டு வீரர்கள் உலகெங்கும் இருந்து சீனாவுக்கு வர உள்ள நிலையில் அவர்கள் தங்கவிருக்கும் ஹோட்டல்களில் ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. வீரர்களுக்கு தேவையான உணவு ரோபோ வழியாக அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது. அறையின் கதவு வரை செல்லும் ரோபோக்களில் வீரர்கள், தங்களின் கடவு எண்ணை கொடுத்தால் ரோபோவின் உள்ளிருக்கும் உணவு அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

மீடியா சென்டரிலும் உணவு தயாரிக்க ரோபோக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பார் டெண்டர் ரோபோக்கள், கூடாரத்தின் மேலிருந்து உணவு டெலிவரி செய்ய பறக்கும் ரோபோக்கள், மேசையில் ஒவ்வொருவருக்கு மத்தியிலும் தடுப்புகள் என பெரும்பாலான இடங்களில் மனித பணியாளர்களைக் குறைக்கும் பொருட்டு ரோபோக்களின் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டோக்கியோ போல இல்லாது தளர்வற்ற வளையத்தின் மூலம் பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 2000க்கும் மேற்பட்ட வீரர்கள், 25,000 க்கும் அதிகமான வெளிநாட்டு பார்வையாளர்கள், அதிகாரிகள் வர உள்ள நிலையில் உள்நாட்டு பார்வையாளர்கள் கலந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 20,000க்கும் அதிகமான சீனாவைச் சேர்ந்த தன்னார்வலர்கள், பணியாளர்கள் அந்த வளையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாரும் எக்காரணத்தைக் கொண்டும் அந்த வளையத்தைத் தாண்டி அனுமதிக்கப்படுவதில்லை.

தினந்தோறும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வீரர்கள் தங்கள் சோதனைக்குப் பிறகு 24 மணிநேரத்திற்குள் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்கள் green code வரும் வரை காத்திருக்க வேண்டும்.

பீஜிங் ஒலிம்பிக்ஸ் 2022

"சீனாவில் ஒமிக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்துவது கடினம், இருப்பினும் ஒலிம்பிக் என்று வரும்போது சமாளிக்க முடியும். தனித்தனி நிகழ்வுகளாக நடைபெற இருப்பதால் இந்தப் பணியில் மிகப்பெரும் வளங்களைப் பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும்" என்கிறார் நியூசிலாந்தை சேர்ந்த பொதுநல பேராசிரியர் மைக்கேல் பேக்கர்.

முதன்முதலாக தொற்று பரவிய நாடான சீனா, இந்தாண்டு ஒலிம்பிக்கை வெற்றிகரமாக நடத்துமா என்பதே விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது.



from Latest News

No comments