Breaking News

ஒன்றரை பவுன் நகைக்காக பீரோவில் அடைத்துவைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுவன்? - அதிர்ச்சி சம்பவம்!

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் ரிச்சர்ட். இவர் வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்துவருகிறார். ரிச்சர்ட்டின் மனைவி சகாய சில்ஜா (28), மகன் ஜோகன் ரிஷி(4) மற்றும் இரண்டு மாத மகளுடன் கடியப்பட்டணம் மீனவர் கிராமத்தில் வசித்து வந்தார். சிறுவன் ஜோகன் ரிஷி நேற்று முன் தினம் மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் தாய் மதிய உணவு கொடுப்பதற்காக மகனை தேடினார். ஆனால், மகனைக் காணவில்லை. தாய் சிறிது நேரம் அந்தப் பகுதியில் தேடிப்பார்த்தார். சிறுவன் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுவனின் தாய் சகாய சில்ஜா மணவாளகுறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடினர். கடல் பகுதிக்கு சென்றிருக்கலாம் என கடற்கரை பகுதிகளிலும் தேடினர். அதே சமயம் சிறுவன் மாயமான நேரம் கழுத்தில் ஒருபவுன் பவுன் செயின் மற்றும் கையில் அரை பவுன் பிரேஸ்லெட் அணிந்திருந்தான். எனவே, நகைக்காக சிறுவன் கடத்தப்பட்டிதுக்கலாம் என சந்தேகம் அடைந்த போலீஸார் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண்ணையும், அவர் கணவர் சரோபினையும்(37) விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்தனர்.

கைது செய்யப்பட்ட பாத்திமா

பாத்திமாவையும், அவர் கணவரையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றதை அடுத்து பொதுமக்கள் அவர்களது வீடு முன் குவிந்தனர். மேலும் கோபமான பொதுமக்கள் பாத்திமாவின் வீட்டை அடித்து நொறுக்கினர். ஆவேசமான சிலர் வீட்டுக்குள் இருந்த பீரோவையும் அடித்து உடைத்தனர். அப்போது பீரோவின் கதவுகள் திறந்தன. பீரோவின் கீழ்ப்பக்க அறையில் வாய்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஜோகன் ரிஷி இருந்ததை பார்த்து அந்த மக்கள் அதிர்ந்தனர்.

அதையடுத்து, வேகமாக செயல்பட்டு சிறுவனின் கட்டுக்களை அவிழ்த்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர், அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவனைக் கொலை செய்த பாத்திமாவுக்கு தண்டனை வழங்கவேண்டும் எனவும், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது எனவும் கோரிக்கை வைத்தனர். டி.எஸ்.பி தங்கராமன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அடித்து நொறுக்கப்பட்ட பாத்திமாவின் வீடு, மறியல் செய்த பொதுமக்கள்

இதுபற்றி போலீஸார் கூறுகையில், ``சிறுவனின் கழுத்தில் காயம் இருக்கிறது. சிறுவனின் வாயை கட்டி பீரோவுக்குள் அடைத்து வைத்ததால் மூச்சுத்திணறி இறந்தானா... அல்லது கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டானா என பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும்" என்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: கன்னியாகுமரி: ஆண் நண்பரிடம் பேசத் தடை; ஆத்திரத்தில் தந்தையை ஆள்வைத்துக் கொன்ற மகள்!



from Latest News

No comments