Doctor Vikatan: குழந்தைபெற்று 5 வருடங்கள் கழித்தும் குறையாத உடல் எடை; என்ன செய்வது?
``கர்ப்பகாலத்தில் குழந்தையின் எடை மிகக் குறைவாக இருப்பதாகச் சொல்லி, கடைசி மாதங்களில் எனக்கு நிறைய உணவு கொடுத்தார்கள். பிரசவத்துக்குப் பிறகு ஏறிய 20 கிலோ எடையை 5 ஆண்டுகளாகியும் குறைக்க முடியவில்லை. வயிறும் கர்ப்பிணியைப் போலவே இருக்கிறது. இனி வயிற்றைக் குறைப்பது சாத்தியமில்லை என்கிறார்களே... அது உண்மையா? வயிற்றுத் தசைகளைக் குறைக்க வழி சொல்லுங்கள்."
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அழகியல் சரும மருத்துவர் ஷர்மதா குமார்.
``கர்ப்பகாலத்தில் எடை அதிகரிப்பது இயல்பான விஷயம். இந்திய பெண்களைப் பொறுத்தவரை கர்ப்ப காலத்தில் சராசரியாக 12 முதல் 15 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். அதைவிட அதிகமாக எடை கூடினால் அதைக் குறைக்க வேண்டியது மிக முக்கியம். பொதுவாக பிரசவமான முதல் 6 மாதங்களுக்குள் எடையைக் குறைக்க வேண்டியதும் முக்கியம். பிரசவமானதும் மருத்துவர், அது குறித்த ஆலோசனைகளைச் சொல்வார். அவற்றைப் பின்பற்றி எடையைக் குறைக்க முயலலாம். சிலருக்கு அந்த வழிகளில் எடை குறையாதபோது பிரத்யேக சிகிச்சைகள் தேவைப்படலாம்.
சிசேரியன் ஆனவர்கள், ஏற்கெனவே பருமன் பிரச்னை உள்ளவர்கள், ஏற்கெனவே சருமம் பலவீனமாகவும் தொய்வடைந்தும் போனவர்களுக்கு எடை அதிகரிப்பு பிரச்னை தொடரும். சில பெண்கள் எடை அதிகமிருக்க மாட்டார்கள். ஆனாலும், அவர்களுக்கு சருமம் தொளதொளவென தளர்ந்துபோயிருக்கும். அந்நிலையில் அவர்களுக்கு தொய்வடைந்து, தளர்ந்துபோன அந்தச் சருமத்தை மட்டும் சரிசெய்ய வேண்டியிருக்கும்.
Also Read: Doctor Vikatan: மாத்திரை சாப்பிட்டால் மட்டுமே வரும் பீரியட்ஸ்; தீர்வு என்ன?
`டம்மி டக்' (Tummy Tuck) அல்லது `அப்டாமினோபிளாஸ்டி' (Abdominoplasty) அறுவைசிகிச்சையின் மூலம் அந்தச் சருமத்தை மட்டும் வெட்டி எடுத்துச் சரிசெய்யலாம். இன்னும் சில பெண்களுக்கு ஆங்காங்கே கொழுப்பு சேர்ந்திருக்கும். அந்தக் கொழுப்பை அறுவை சிகிச்சையில்லாமலேயே `க்ரையோலைப்போலைசிஸ்' (Cryolipolysis) முறைப்படி நீக்கலாம். அதுகூடவே `க்ரையோலைப்போலைட்டிக் காக்டெயில் இன்ஜெக்ஷனு'ம் செலுத்தலாம்.
எனவே, ஒரு பெண்ணின் சருமத்தின் தன்மை (அது எந்தளவுக்கு தளர்ந்திருக்கிறது), உடல்பருமன், அதிகப்படியான கொழுப்பு என எது பிரச்னை என்று கண்டுபிடித்து மேற்சொன்னவற்றில் எந்த மாதிரியான சிகிச்சை தேவை என்பதை மருத்துவர் பரிந்துரைப்பார். கூடவே உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் பரிந்துரைக்கப்படும்."
from Latest News
No comments