Breaking News

Doctor Vikatan: மாத்திரை சாப்பிட்டால் மட்டுமே வரும் பீரியட்ஸ்; தீர்வு என்ன?

என் வயது 29. திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றன. ஒன்றரை வயதில் இரட்டைக் குழந்தைகள் இருக்கிறார்கள். பூப்பெய்தியதிலிருந்தே எனக்கு பீரியட்ஸ் ரெகுரலாக வருவதில்லை. கடந்த 4 வருடங்களாக மாத்திரைகள் சாப்பிட்டால்தான் பீரியட்ஸ் வருகிறது. இல்லையென்றால் 6 மாதங்களானாலும் வராது. இதைச் சரிசெய்ய முடியுமா?

-கமல ராணி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சந்தியா

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மற்றும் மகளிர்நல மருத்துவர் சந்தியா.

``உங்களுடைய பிரச்னைக்கான மிகச் சிறந்த தீர்வு உங்கள் கையில்தான் உள்ளது. லைஃப்ஸ்டைல் எனப்படும் வாழ்வியல் மாற்றம்தான் இதற்கான மிகச் சிறந்த தீர்வு. நீங்கள் தினமும் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம்வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிலும் அடிவயிற்றுப் பகுதித் தசைகளுக்கு வேலைகொடுக்கும்படியான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அதாவது தொப்பைக்குக் கீழுள்ள கொழுப்பைக் குறைக்கும் பயிற்சிகளைச் செய்ய வேண்டியது அவசியம்.

Also Read: Doctor Vikatan: N95 மாஸ்க் அல்லது இரண்டு மாஸ்க்; எது பாதுகாப்பானது?

கார்டியோ பயிற்சிகளும் செய்யலாம். வயிறு, இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் உள்ள கொழுப்பைக் குறைக்க வேண்டியது மிக மிக அவசியம்.

அடுத்து உங்கள் உணவுப்பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். புரோட்டீன் அதிகமாகவும் கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். அசைவம் சாப்பிடுகிறவர்கள் என்றால் மீன் சாப்பிடலாம். எப்போதாவது சிக்கன் சாப்பிடலாம். மட்டன் தவிர்க்கப்பட வேண்டும்.

சைவ உணவுக்காரர்கள் பருப்பு வகைகள், சோயா போன்றவற்றைச் சாப்பிடலாம். அரிசி உணவுகளைக் குறைக்க வேண்டும். உருளைக்கிழங்கு போன்ற பூமிக்கடியில் விளையும் காய்கறிகளைக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

Sanitary Napkin

Also Read: Doctor Vikatan: PCOD உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை?

உணவும் உடற்பயிற்சியும் முறைப்படுத்தப்பட்டாலே உங்கள் பீரியட்ஸ் சுழற்சி முறைப்படும். இவற்றின் மூலம் உங்கள் பிரச்னை சரியாகும்வரை இதற்கிடையில் மருத்துவரை அணுகி 45 நாள்கள் முதல் 2 மாதங்களுக்கொரு முறை பீரியட்ஸ் வரவழைக்க மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல 6 மாதங்கள்வரை எல்லாம் பீரியட்ஸ் வராமல் இருக்கக்கூடாது. அது பிற்காலத்தில் வேறு பிரச்னைகளுக்கு காரணமாகலாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


from Latest News

No comments