அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... மொத்தம் 49 இடங்களில் ரெய்டு!
முன்னாள் உணவுத்துறை அமைச்சர், தற்போதைய அ.தி.மு.க திருவாரூர் மாவட்ட செயலாளராகவும் இருப்பவர் காமராஜ். இவர் 2015 முதல் 2021 -ம் வரையான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
அவரது வீடு, அலுவலகம் உட்பட 49 இடங்களில் இன்று அதிகாலை முதலே தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் முன்னாள் அமைச்சர் காமராஜின் மகன் உள்ளிட்ட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் காமராஜரின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவர்களின் தொடர்பில் உள்ளவர்கள் என இந்த சோதனை நீண்டிருக்கிறது.
மன்னார்குடி தெற்கு வீதியில் உள்ள ஆர்.காமராஜ் வீடு, அவருடைய அக்கா மகன் ஆர்.ஜி.குமார் வீடு, நன்னிலத்தில் உள்ள வீடு, உறவினரான வழக்கறிஞர் உதயகுமார் வீடு, மன்னை கிருஷ்ணமூர்த்தி வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இதில் ஆர்.காமராஜ் வீட்டின் முன்பு அதிமுக-வினர் கூடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகிறார்கள்.
தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் உள்ள ஆர்.காமராஜ் சம்மந்தி டாக்டர் மோகன் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
from Latest News
No comments