Doctor Vikatan: குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டும் நாள்களில் மூலிகை மருந்து கொடுப்பது சரியா?
பிறந்த குழந்தைகளுக்கு சளி பிடிக்காமலிருக்க வெற்றிலைச்சாறு கொடுக்கச் சொல்கிறார்களே... அது சரியா? அப்படியானால் எவ்வளவு, எப்படி, எந்த காம்பினேஷனில் கொடுக்க வேண்டும்? அதே மாதிரி தலைக்குக் குளிப்பாட்டும் நாளில் சித்த மருந்து கொடுக்கச் சொல்கிறார்கள். அதுவும் தேவைதானா? எப்படித் தயாரிப்பது, எவ்வளவு கொடுக்க வேண்டும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி...
வெற்றிலைக்கு சிறப்பான ஒரு குணம் உண்டு. அதாவது குரல் கம்முதல், தலைபாரம், மண்டையில் நீரேற்றம், நுரையீரல் சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது வெற்றிலை.
பிறந்த குழந்தைகளுக்கு வெற்றிலைச்சாறு கொடுக்கலாம். வெற்றிலைச்சாறு காரச்சுவை கொண்டது என்பதால் 2 அல்லது 3 சொட்டு சாற்றுடன், அதே அளவு தேன் கலந்து கொடுக்கலாம். வெற்றிலையை இன்னொரு முறையிலும் குழந்தைகளுக்கு மருந்தாகத் தரலாம்.
நரம்பும் நுனியும் நீக்கிய வெற்றிலையில் பாதியை எடுத்துக் கொள்ளவும். அதை சிறிய துண்டுகளாக வெட்டி, ஒரு பாலாடை அளவு தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து கால் பாலாடை அளவுக்கு, குழந்தைக்கு புரையேறாமல் கொடுக்க வேண்டும்.
வெற்றிலை போலவே குழந்தைகளுக்கு துளசி, ஓமவல்லி, முருங்கை இலை, வேப்பிலை, நுணா இலை, ஆடாதோடா இலை போன்றவற்றையும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இவற்றில் நுணா இலை போன்று பெரிய இலையாக இருந்தால் ஒன்று எடுத்துக் கொள்ளலாம். துளசி, வேப்பிலை போன்றவற்றை மூன்று இலைகள் எடுத்துக் கொள்ளலாம்.
ஒன்றரை பாலாடை அளவு தண்ணீரில் இந்த இலையைச் சேர்த்து கூடவே ஒரு பல் பூண்டும் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டவும். ஒரு வயதுக் குழந்தை என்றால் அரை பாலாடை அளவுக்கும், பிறந்த குழந்தைகள் என்றால் ஐந்து அல்லது ஆறு சொட்டுகளும் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்குத் தலைக்குக் குளிப்பாட்டும் நாள்களில் இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தைக் கொடுக்கலாம். அதனால் குழந்தைகளுக்கு சளி பிடிக்காது. வயிற்றில் மாந்த உணர்வு ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, செரிமான கோளாறுகளும் நீங்கும்.
தலைக்குக் குளிப்பாட்டும்போது உடலில் வெப்ப மாற்றம் ஏற்படுவதால் மேற்சொன்ன பாதிப்புகள் வர வாய்ப்புகள் அதிகம். மூக்கில், காதில், தொண்டையில் தண்ணீர் போனால் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரலாம். அப்படி எதுவும் வராமலிருக்க இந்த மருந்துகள் உதவும்.
மிக முக்கியமாக குழந்தைக்கு மருந்து கொடுக்கும்போது புரையேறாதபடி கவனமாக கொடுக்க வேண்டும். பாலாடையிலோ, ஃபில்லரிலோ வைத்து கவனமாகக் கொடுக்க வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News
No comments