இரண்டு மத்திய அமைச்சர்கள் ராஜினாமா.... ஸ்மிருதி இரானி, ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கூடுதல் பொறுப்பு!
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, எஃகு துறை அமைச்சர் ராம் சந்திர பிரசாத் சிங் ஆகியோர் தங்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். இது தொடர்பாக வெளியான தகவலில், மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி-யின் மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இந்த நிலையில், அவர் பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து அவர் நேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பா.ஜ.க-வின் 395 நாடாளுமன்ற உறுப்பினர்களில் முஸ்லிம் எம்.பி.-கள் தற்போது யாரும் இல்லை. 15 மாநிலங்களில் 57 இடங்களுக்குச் சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலின் போது பதவிக்காலம் முடிவடைந்த மூன்று பா.ஜ.க இஸ்லாமிய எம்.பி-க்களில் நக்வியும் ஒருவர், ஆனால் அவர்களில் யாருடைய பெயரும் அடுத்த பதவிகளுக்குப் பரிந்துரைக்கப்படவில்லை.
இந்த நிலையில், நுபுர் ஷர்மாவின் கருத்துகளால் சிறுபான்மையினரிடம் பா.ஜ.க-வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெயவதற்க்கு துணை ஜனாதிபதி வேட்பாளராகச் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவரை நிறுத்துவது குறித்து ஆலோசிப்பதாகவும், அந்த பட்டியலில் கேரளா ஆளுநர் முகமது கான், முக்தர் அப்பாஸ் நக்வி-யின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அமைச்சர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கு, சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் எஃகு அமைச்சகங்களின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
from Latest News
No comments