Doctor Vikatan: பாடி மசாஜ் செய்து கொள்வது உண்மையிலேயே பலன் தருமா?
என் நண்பன், மாதம் ஒருமுறை மசாஜ் செய்து கொள்கிறான். அதனால் உடல் புத்துணர்வு பெறுவதாகச் சொல்கிறான். மசாஜ் சிகிச்சை எல்லோருக்கும் அவசியமானதா? அது உண்மையிலேயே பலன் தருமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்
சரியான நபர்களால் முறையாகச் செய்யப்படும்போது மசாஜ் அருமையான பலன்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. உடல் அசதியாக இருக்கும்போது யாராவது நமக்கு கை, கால்களை அழுத்திப் பிடித்துவிட்டால் ஆனந்தமாக உணர்கிறோம் அல்லவா... அதுகூட ஒருவகையிலான மசாஜ்தான்.
மசாஜ் என்பது தசைகளை, தசைநார்களை அழுத்தி, நீவிவிடுகிற ஒரு சிகிச்சை. அதில் மிதமானது முதல் அழுத்தமானது வரை பல வகை உண்டு. உடலை ரிலாக்ஸ் செய்து புத்துணர்வைத் தரும் ஸ்வீடிஷ் மசாஜ், அடிபட்ட பிறகு தசைகளையும் இணைப்புத் திசுக்களையும் அழுத்திப் பிடித்துச் செய்யப்படும் டீப் மசாஜ், விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுவோருக்கான ஸ்போர்ட்ஸ் மசாஜ், இறுக்கமான தசைநார்களை சரியாக்கும் ட்ரிக்கர் பாயின்ட் மசாஜ் என மசாஜில் பல வகை உண்டு.
நல்ல மசாஜ், ஸ்ட்ரெஸ்ஸை விரட்டும். களைப்பை நீக்கும். தசை இறுக்கங்களைப் போக்கி, உடலை ரிலாக்ஸ் செய்யும். வலிகளை நீக்கும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். வேகமான இதயத்துடிப்பை சீராக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும். பதற்றம், செரிமான கோளாறுகள், தலைவலி, தூக்கமின்மை, முதுகுவலி, நரம்புவலி, முதுகு மற்றும் கழுத்து வலிகளைக்கூட சரிப்படுத்துவதாகத் தகவல்கள் உள்ளன.
மருத்துவ காரணங்கள் ஏதுமில்லாவிட்டாலும் மசாஜ் தரும் ரிலாக்சேஷனுக்காகவே அதைச் செய்துகொள்ள விரும்புகிறவர்கள் அதிகம். ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையில் மசாஜ் என்பது முக்கியமான ஒரு பிரிவு. பல நோய்களுக்கும் அது தீர்வளிப்பதாகச் சொல்கிறது ஆயுர்வேதம்.
இப்படி மசாஜ் செய்து கொள்வதில் பல நன்மைகள் இருந்தாலும் அதில் சில ரிஸ்க்குகளும் உள்ளன. உடலின் அழுத்தப் புள்ளிகள் பற்றி தெரியாமல், மசாஜ் தொழில்நுட்பம் தெரியாமல் செய்யப்படும் பட்சத்தில் அது பல ஆபத்துகளை ஏற்படுத்தலாம்.
தொற்றுநோய்கள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், ரத்தம் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள், நரம்பியல் பாதிப்பு உள்ளவர்கள், காயங்கள், புண்கள் உள்ளவர்கள் எல்லாம் மசாஜ் செய்து கொள்வதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.
மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே மசாஜ் சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். ரிலாக்சேஷனுக்கான மசாஜ் என்றால் அதைச் செய்யும் இடம், செய்யும் நபர், அவரது அனுபவம் உள்ளிட்டவை தெரிந்து நம்பகமானதாக இருந்தால் செய்து கொள்ளுங்கள்.
பதிவுபெற்ற நிபுணரா என்று பார்த்துவிட்டுச் செய்து கொள்ள வேண்டியது முக்கியம். முறையாகச் செய்யப்பட்ட மசாஜ் என்றால் வலி இருக்காது. ஒருவேளை மசாஜுக்கு பிறகு உங்களுக்கு உடல் வலியோ, அசௌகர்யமோ இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News
No comments