Breaking News

விஐபி, அரசியல்வாதிகளுக்கென புல்லட் புரூஃப் நேரு ஜாக்கெட் அறிமுகம் செய்த டிசிஎல்- விலை என்ன தெரியுமா?

ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட் எனும் அரசு பொதுத் துறை நிறுவனமான டி.சி.எல், விவிஐபி மற்றும் அரசியல்வாதிகளுக்கென குறைந்த விலையில் புல்லட் புரூஃப் நேரு ஜாக்கெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற சர்வதேச போலீஸ் எக்ஸ்போ 2022 நிகழ்ச்சியில் இந்த புதிய புல்லட் புரூஃப் நேரு ஜாக்கெட்டை, டி.சி.எல் நிறுவனம் காட்சிப்படுத்தியது. மேலும் இதன் விலை என்பது ரூ.35,000 என்றும், இந்த ஜாக்கெட்டின் எடை 2.5 கிலோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCL - ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட்

இந்த புதிய புல்லட் புரூஃப் நேரு ஜாக்கெட் பற்றி டி.சி.எல்-ன் உதவி மேலாளர் குல்தீப் குமார் கூறுகையில், ``பொதுவாக நேரு ஜாக்கெட், குர்தா அல்லது சஃபாரி உடைகளை அணிய விரும்பும் அரசியல்வாதிகளுக்கென, குறைந்த விலையில் எளிதில் அணியக்கூடிய எடைகுறைந்த அளவில் தோட்டாக்கள் துளைக்காத ஜாக்கெட்டை உருவாக்கி சோதனை செய்துள்ளோம். 2.5 கிலோ எடை கொண்ட இந்த ஜாக்கெட்டின் விலையானது ரூ.35,000 தான். இது முழுக்க முழுக்க வி.வி.ஐ.பி-க்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கான பாதுகாப்பு உடையாக இருக்கும். மேலும் இந்த புல்லட் புரூஃப் ஜாக்கெட், அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்டுள்ளது.

புல்லட் புரூஃப் நேரு ஜாக்கெட்

இந்த ஜாக்கெட்டானது, குறிப்பிட்ட வரம்புக்குள், அதாவது குறைவான தூரத்தில் இருந்து தாக்கும் 9 MM போன்ற சிறிய அளவிலான கைத்துப்பாக்கிகளிலிருந்து பாதுகாப்பை வழங்கும். துவைக்கக்கூடியது வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஜாக்கெட் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதனை அணியும்போது, உடுத்துவதற்கு வசதியாக இருப்பதாகவும், பாதுகாப்பாக இருப்பதாகவும் உணரவைக்கும். இந்த ஜாக்கெட்டின் செயல்திறன், சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தில் (டிபிஆர்எல்) பரிசோதிக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.



from Latest News

No comments