Breaking News

நாடாளுமன்றத்தை குறி வைக்கும் ஷிண்டே... கொறடாவை மாற்றி கட்சியை காப்பாற்ற போராடும் உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிராவில் சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தி அதிலிருந்து 40 எம்.எல்.ஏ.க்களை பிரித்து கொண்டு வந்து பாஜக-வுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து ஏக்நாத் ஷிண்டே புதிய அரசை அமைத்து இருக்கிறார். சட்டமன்றத்தில் புதிய அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காத உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உறுப்பினர்கள் 16 பேரின் பதவியை பறிக்க வேண்டும் என்று கேட்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி சிவசேனா கொறடா பரத் கோகாவாலா சபாநாயகரிடம் நோட்டீஸ் நோட்டீஸ் கொடுத்து இருக்கிறார்.

புதிய சபாநாயகர் ஏற்கனவே அதிருப்தி சிவசேனா அணியை உண்மையான சிவசேனாவாக அங்கீகரித்து இருக்கிறார். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக உத்தவ் தாக்கரே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீது வரும் 11-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது. இதனால் யாரது அணி உண்மையான சிவசேனா என்ற போட்டி உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே ஏற்பட்டு இருக்கிறது. தற்போது நாடாளுமன்றத்திலும் உத்தவ் தாக்கரே கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

ஏக்நாத் ஷிண்டே

நாடாளுமன்றத்தில் சிவசேனாவிற்கு மக்களவையில் 19 பேரும், மாநிலங்களவைதில் 3 பேரும் இருக்கின்றனர். அவர்களை தக்கவைத்துக்கொள்ள தற்போது உத்தவ் தாக்கரே போராடி வருகிறார். நாடாளுமன்றத்திலாவது பெரும்பாலான எம்.பி.க்களின் ஆதரவை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார். இதற்காக உத்தவ் தாக்கரே மக்களவை சிவசேனா கொறடாவை மாற்றி இருக்கிறார். பாவ்னா காவ்லியை மாற்றிவிட்டு ராஜன் விச்சாரே என்பவரை நியமித்து இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மக்களவை சபாநாயகரிடம் மனுக்கொடுத்து இருக்கிறார்.

ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும் என்று சிவசேனா எம்.பி.ராகுல் செவாலே கட்சித்தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது சிவசேனாவில் இருக்கும் மக்களவை உறுப்பினர்களில் 12 பேர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. சட்டமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டேயிக்கு 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் எந்த அணிக்கு அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அவர்கள் அணியைத்தான் உண்மையான சிவசேனாவாக தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கு வாய்ப்பும் இருக்கிறது. உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூட்டிய எம்.பி.க்கள் கூட்டத்தில் இரண்டு எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை. அதில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேயும் அடங்கும். இதற்கிடையே மீண்டும் உத்தவ் தாக்கரே தலைமைக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.



from Latest News

No comments