``அதற்கு சிவன் இருக்கிறார்” - சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்தது என்ன?... ஆளுநர் தமிழிசை விளக்கம்
கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருக்கும் நடராஜர் கோயிலில் நேற்று முந்தினம் தேரோட்டமும், நேற்று ஆணி ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று காலை சிதம்பரம் கோயிலுக்குச் சென்றார். அப்போது ஆயிரம் கால் மண்டபத்தில் ஸ்ரீ நடராஜர் பெருமான் சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோருக்கு நடைபெற்ற அபிஷேக தரிசனத்தை பார்த்துவிட்டு அங்கு அமர்ந்திருக்கிறார். அப்போது தீட்சிதர் ஒருவர் அவரை அங்கு அமரக் கூடாது என்று தெரிவித்ததாக தகவல் வெளியானது. அத்துடன் சிதம்பரம் கோயில் தீட்சிதர்களால் ஆளுநர் தமிழிசை அவமானப்படுத்தப்பட்டார் என்ற தகவலும் வெளியானது.
அதையடுத்து புதுச்சேரிக்கு வந்த தமிழிசையிடம், ``தீட்சிதர்களால் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகிறதே ?” என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ``என்னை யாரும் அவமதிக்கவில்லை. நான் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்தபோது ஒருவர் என்னிடம் வந்து, அந்த பக்கம் நிறைய இடமிருக்கிறது அங்கு உட்காருங்கள் என்றார். ஆனால் நான் இறைவனை பார்ப்பதற்காக வந்திருக்கிறேன் இங்கேதான் உட்காருவேன் என்று சொன்னதும் அவர் போய்விட்டார். யாரோ ஒருவர் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மற்ற தீட்சிதர்கள் எனக்கு மாலையும், பிரசாதமும் கொடுத்தார்கள். ஒரு தீட்சிதர் வந்து என்னிடம் கூறினார்தான். அதை நான் இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் இங்குதான் அமரவேன் என்று நான் சொன்னதும் அவர் போய்விட்டார்.
சிதம்பரம் கோயில் என்றாலே பிரச்னைகளை தீர்ப்பதற்காகத்தான். ஆனால் அந்த கோயிலே பிரச்னை வருவதாக இருக்கிறது. தீட்சிதர்களின் பிரச்னையும், மக்களின் பிரச்னையும் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு சிவன் இருக்கிறார்” என்றார்.
from Latest News
No comments